மழையுடன் புழுதிப் புயல்! திணறிய தலைநகர் டெல்லி

தலைநகர் டெல்லியில் மாலையில் மழையுடன் சேர்ந்து புழுதிப் புயல் தாக்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 

புழுதிப் புயல்

Photo Credit: Twitter/ANI

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதிப் புயல் தாக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்திருந்தது. ஆனால், இன்று மதியம் வரை அதற்கான எந்த அறிகுறியும் டெல்லி சுற்றுவட்டாரங்களில் தென்படவில்லை. ஆனால், மாலை நேரத்தில் சூழல் முற்றிலும் மாறியது. மேகங்கள் கருக்கொள்ள மழையுடன், புழுதிப்புயலும் வீசத்தொடங்கியது. குறிப்பாக டெல்லியின் என்.சி.ஆர். பகுதி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் புழுதிப் புயல் வீச்சால் வீடுகளிலிருந்த பூந்தொட்டிகள் தூக்கி வீசப்பட்டதோடு, சில இடங்களில் விளம்பர போர்டுகளும் சேதமடைந்தன. 
இதனால், டெல்லியில் விமான சேவை,மெட்ரோ ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன. நொய்டா - துவாரகா இடையிலான மெட்ரோ ரயில் சேவை அரைமணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. அதேபோல், டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வரவேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள், வேறு விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய ஏர் விஸ்தாரா விமானம், அகமதாபாத்துக்குத் திருப்பி விடப்பட்டது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!