வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (13/05/2018)

கடைசி தொடர்பு:21:30 (13/05/2018)

பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சிபெற்ற நபர் மும்பையில் கைது!

மும்பையின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுருந்த ஒருவரை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

கைது

கைது செய்யப்பட்டவர், பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மும்பையின் ஜூஹூ பகுதியைச் சேர்ந்த போலீஸார் நடத்திய ரகசிய விசாரணையில் 32 வயதான அந்த நபர் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மும்பையிலிருந்து துபாய், ஷார்ஜா வழியாக கராச்சி சென்ற அந்த நபர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கம் நடத்திய பயிற்சியில் கலந்துகொண்டுள்ளார். மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஒருவர் அழைத்தன் பேரில், இங்கிருந்து துபாய் சென்ற இவர், அங்கிருந்து ஷார்ஜா சென்றுள்ளார். அங்கு சில காலம் தங்கியிருந்த அந்த நபர், பின்னர் கராச்சி சென்று பயிற்சியில் கலந்துகொண்டிருக்கிறார். வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் மற்றும் அதிநவீன குண்டுகள் குறித்த பயிற்சி பெற்ற அவர் மீண்டும் மும்பை திரும்பி, பதுங்கியிருக்கிறார். முக்கிய புள்ளிகள் சிலரும் அவரின் ஹிட் லிஸ்டில் உள்ளனர். மேலும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்த வேண்டும் என அவருக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர். மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய தீவிரவாதத் தடுப்பு போலீஸார், மே மாதம் 21-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றிருக்கின்றனர்.