`நவாஸ் ஷெரீப் நிலைதான் இவர்களுக்கும்' - கருத்து மோதலில் முன்னாள் - இந்நாள் மத்திய அமைச்சர்கள்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்நாள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. 

டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர்,  ``முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் சேர்த்துள்ள சொத்துகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்காததால் அவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ராகுல்காந்தி கருத்துச் சொல்ல வேண்டும். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாட்டுச் சொத்துகளால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது போன்ற நிலைமை தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது" என்றார். 

இவரது இந்தக் கருத்துக்கு ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,  `` இந்தியாவின் மிகப் பணக்காரக் கட்சியின் தலைவர் கோடிக்கணக்கான டாலர்களைப் பற்றிக் கனவு காண்கிறார். அந்தப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போட வேண்டியதுதானே!. நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வருமான வரித்துறையின் வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார் என்று டில்லியில் பேச்சு"  எனக் கூறியுள்ளார். இவர்களது கருத்து மோதல் காங்கிரஸ் - பா.ஜ.க-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!