வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (14/05/2018)

கடைசி தொடர்பு:07:39 (14/05/2018)

`இதுதான் கடைசி; இனி தேர்தல்களில் போட்டியில்லை' - சித்தராமையா அறிவிப்பு!

இதுதான் கடைசித் தேர்தல், இனி தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

மிகுந்த பரபரப்புக்கிடையே கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. இதில் யார் வெற்றிபெறப்போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் வடமாநிலங்களில் தொடர் வெற்றிகளைப் பெற்றுவரும் பா.ஜ.க, தென்மாநிலங்களில் காலூன்றிய ஒரே மாநிலம் கர்நாடகாதான். இதனால் இந்தமுறை எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என வேலைபார்த்துள்ளது. அதேபோல் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலை தக்கவைத்து விட வேண்டும் எனப் போராடி வருகிறது. இதற்கான முடிவுகள் நாளை தெரிந்துவிடும் என்றாலும் வெளியாகியுள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டசபை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இனி தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

கர்நாடக செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில்,  ``இந்தத் தேர்தல்தான் கடைசி. இனி தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை. ஆனாலும் அரசியலில் தொடர்ந்து நீட்டிப்பேன். பட்டியலினத்தவரை முதல்வராகக் கட்சி மேலிடம் தேர்வு செய்தால் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். பதவியை விட்டுத்தருவேன். அதே நேரத்தில் எம்.எல்.ஏ-க்கள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்தத் தேர்தல் வரவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று கூற முடியாது. தேர்தல் முடிவு குறித்து பல கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதை முழுமையாக நம்ப முடியாது. கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க