வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (14/05/2018)

கடைசி தொடர்பு:11:31 (14/05/2018)

கடும் கெடுபிடிகளுக்கிடையே தொடங்கிய மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குப்பதிவு

பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று காலை தொடங்கியது மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குப்பதிவு.

மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்துக்கு 14.5.18 அன்று பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறும் என முன்னதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது. 20 மாவட்டங்களில் உள்ள சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று பதிவான வாக்குகள், வரும் 17-ம் தேதி  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் கருதப்படுகிறது. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பிரச்னைகள்  எழுந்தன. தேர்தல் தேதியை மாற்றும்படி மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு வேட்புமனு தாக்கலிலும் சிக்கல் ஏற்பட்டு, அதற்கும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 

இன்றையத் தேர்தலின்போது, மேற்கு வங்கத்தில் பிரச்னை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அசாம், பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலிருந்து பாதுகாப்புப் பணிக்காகத் துணை ராணுவப் படையினர் மேற்கு வங்கத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, அம்மாநில காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.