வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (14/05/2018)

கடைசி தொடர்பு:13:00 (14/05/2018)

`காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அமைப்பு!’ - மத்திய அரசு தகவல் #Cauvery

நீண்ட நாள்களாகத் தாக்கல் செய்யப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.

காவிரி

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். வரைவுத் திட்டம் சீல் இடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.  

‘காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன? உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தும் அதிகாரம் குழுவுக்கு அளிக்கப்படும். தேவைப்பட்டால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை குழுக்களை அமைத்துக்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்படும் காவிரி நீர்ப் பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், 2 பகுதிநேர உறுப்பினர்கள், மாநிலத்துக்கு ஒருவர் என 4 பேர் என மொத்தம் 10 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். அதில் நீர் வளத்துறை செயலாளரும் ஒருவராக இடம் பெற்றிருப்பார். இந்தக் குழு தலைவரின் பதவி காலம் 5 ஆண்டுகள்.’ இவ்வாறு வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தவிர வேறு சில தகவல்களும் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த வழக்கு வரும் மே 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், ‘காவிரி நதிநீர் பங்கீடு செய்ய 10 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். இது காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அமைப்பாக இருக்கும். இந்த அமைப்பின் தலைவராக இருப்பவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் ’என்றார்.