வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (14/05/2018)

கடைசி தொடர்பு:18:34 (14/05/2018)

நல்ல தொடக்கத்துக்குப் பின் வலுவிழந்தது சந்தை 

இந்தியப் பங்குச் சந்தையில் இன்று, முதலீட்டாளர்கள் பெரும்பாலும் ஒரு நிதானமான மனநிலையில் பெரிய அளவில் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தாமல் இருந்ததால், துவக்கத்தில் ஒரு நல்ல முன்னேற்றம் கண்டிருந்தாலும், பங்குகள் நேரம் செல்லச் செல்ல சற்று பலவீனமடைந்து தங்கள் உயர்நிலையிலிருந்து சரிந்தன.

மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 20.92 புள்ளிகள் அதாவது 0.06 சதவிகிதம் உயர்ந்து 35,556.71 என முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 10,806.00 என்று, முந்தைய வர்த்தக தினத்தின் முடிவில் இருந்து 0.10 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து முடிந்தது.

நிகழ்ந்துகொண்டிருக்கும் அமெரிக்க - சீன பேச்சு வார்த்தைகள் அவ்விரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பூசல்களைத் தவிர்க்க உதவும் என்ற எதிர்பார்ப்பில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குச் சந்தை சிறிது லாபத்துடன் முடிந்தது.

இதைத் தொடர்ந்து, இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும்பாலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

இந்நிலையில், இந்திய பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகம் துவக்கத்தில் வலிமையானதாக இருந்தது. இருப்பினும், வெள்ளியன்று வெளியான மொத்த விலை பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உயர்ந்ததாலும், இன்று வெளிவர இருக்கும் ஏப்ரல் மாதத்திற்கான கன்ஸ்யூமர் இன்ஃப்லேஷன் பற்றிய அறிக்கை நிமித்தம் நிலவிய பாதுகாப்பு உணர்வின் காரணமாக, சந்தையில் உயர்நிலையில் ஒரு சப்போர்ட் இல்லாதிருந்தது.

தவிர, கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் புதன்கிழமை வெளியாக இருப்பதால், முதலீட்டாளர்கள் சற்று நிதானமாகச் செயல்பட விரும்பினர் என்றும் கூறலாம்.

மேலும், டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, துவக்கத்தில் 67.21 என்று சற்று உயர்ந்திருந்தாலும், பின்னர் சரிந்து 67.51 என இருந்ததும் சந்தையின் பலவீனத்திற்கு ஒரு காரணம்.

சன் டி.வி நெட்ஒர்க் பங்கு, அந்நிறுவனத்தின் காலாண்டு செயல்பாடுகுறித்த அறிக்கை சிறப்பாக அமைந்ததையடுத்து கணிசமாக உயர்ந்து, 10 சதவிகிதத்திற்கு மேல் லாபத்துடன் முடிவுற்றது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

என்.டி.பி.சி  2.3%
பாரத் பெட்ரோலியம் 1.3%
இந்தஸ்இந்த் பேங்க்  1.25%
டாக்டர் ரெட்டி'ஸ்  1.25%
பவர் கிரிட் கார்பொரேஷன்  1%
இண்டிகோ 2.3%


விலை இறங்கிய பங்குகள் :

டைட்டன் 3.5%
ஜீ டெலி  2.75%
மஹிந்திரா & மஹிந்திரா 2.2%
டாடா மோட்டார்ஸ் 2.2%
பார்தி இன்ப்ராடெல் 2%
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் 2%
அசோக்லேலண்ட், பவர் ஃபைனான்ஸ், டி.எல்.எப் 4 முதல் 4.5 சதவிகிதம் நஷ்டமடைந்தன.

இன்று, மும்பை பங்குச்சந்தையில் 845 பங்குகள் விலை உயர்ந்தும், 1837பங்குகள் விலை குறைந்தும், 160 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.