வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (15/05/2018)

கடைசி தொடர்பு:12:46 (15/05/2018)

`திலகர் பயங்கரவாதத்தின் தந்தையா?' பாடநூல் சர்ச்சைக்கு அ.மார்க்ஸின் பதில்

ராஜஸ்தான் மாநிலப் பாடநூல் வாரியம் வெளியிட்டுள்ள பாடநூலில், `திலகர் பயங்கரவாதத்தின் தந்தை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது  இன்று சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அந்த வரிகளை (படத்தில் உள்ளது) வாசித்தீர்களானால், அதை வில்லங்கமாகவோ திலகர் மீது காழ்ப்பு உணர்வோடோ பாடநூலில் குறிப்பிடவில்லை என்பது விளங்கும். 'பிரிட்டிஷ் அதிகாரத்திடம் கெஞ்சிக் கேட்டு நாம் எதையும் சாதித்துவிட இயலாது' எனத் திலகர் சொன்னதை மேற்கோள் காட்டி, 'இப்படிச் சொன்னதால் அவரை பயங்கரவாதத்தின் தந்தை' எனவும் சொல்வதுண்டு என்கிற பொருளில் பாடநூல் குறிப்பிடுகிறது. 

ஒரு பாடநூலில் அப்படிப் பிரச்னையைச் சுருக்கிச் சொல்லியிருக்க வேண்டியதில்லை என்றாலும் பாடநூலில் அப்படிச் சொல்லப்பட்டுள்ளதில் பெரிய தவறேதும் இல்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

திலகர் - அ.மார்க்ஸ்

இதை நாம் புரிந்துகொள்ளச் சற்றே வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

பாரதியார் சொன்னதுபோல `ஒரு சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில்,  ஸர்வ  சுபங்களுக்கும்  மூலாதாரமாகிய  'தேசபக்தி'  என்ற நவீன மார்க்கம் தோன்றியது.'  அது ஒரு பெரிய எழுச்சியை இந்திய மண்ணில் ஏற்படுத்தியது. அது வேறொன்றுமில்லை. 1905-ல் ஆளுநர் கர்சான் வங்க மாகாணத்தை மேற்கு வங்கம் / கிழக்கு வங்கம் (அதாவது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தனி மாகாணம்) எனப் பிரித்ததை எதிர்த்து இந்தியா முழுவதும் ஏற்பட்ட எழுச்சிதான் அது. 

சுதந்திர இந்தியா என்கிற தெளிவான பொருளுடன் கூடிய இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கத்தை வரலாற்றாசிரியர்கள் அங்கிருந்துதான் தொடங்குவது வழக்கம். நம் பாரதி, வ.வே.சு, வ.உ.சி முதலானோரையும் நாம் இங்கிருந்து தொடங்கியவர்களாகவே கருத வேண்டும். இந்திய அளவில் திலகர், லஜபதி ராய், அரவிந்தர் முதலானோர் இவ்வகையில் வருவர்.

இந்தத் தலைவர்கள் பெரும்பாலும் உயர் சாதி இந்துக்கள். திலகர் முதலானோர் சித்பவன் பார்ப்பனர்கள். பின்னால் வந்த பயங்கரவாதிகளான கோட்சே, சாவர்கர் எல்லோரும் சித்பவன் பார்ப்பனர்களே.

இந்தக் காலகட்டம் காந்தி சகாப்தத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று. இதுகுறித்து நான் மிக விரிவாக எழுதியுள்ளேன். திலகர்- அரவிந்தர் காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டம் வெகுஜனத் தன்மையை அடையவில்லை. பெரிய அளவில் அது உயர்சாதி இந்துக்கள் தலைமை தாங்கிய போராட்டமாகவே இருந்தது. தனிநபர் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்பட்டது. ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கேட்டவுடன், ``நல்ல செய்தி நவின்றாய்" என வ.உ.சி மகிழ்ந்து பாராட்டிய வரலாற்றுக் குறிப்பு உண்டு. 

இத்தகைய வன்முறைச் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்குத் தோதாக புனித நூல் எனக் குறிப்பாக எதையும் சுட்டிக் காட்டாத இந்து மரபில் முதன் முதலில், 'பகவத் கீதை' இந்து மதத்தின் புனித நூலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாளில் மகானாக வெளிப்பட்ட அரவிந்தரின் மாணிக்டோலா தோட்டத்தில் அமைந்திருந்த வெடிகுண்டுத் தொழிற்சாலை விபத்துக்குள்ளானபோது பிரிட்டிஷ் போலீஸ் அங்கு வெடிகுண்டுச் சிதறல்கள் மத்தியில் எரிந்து கிடந்த  ஏராளமான கீதைப் பிரதிகளைக் கண்டெடுத்ததும், அரவிந்தர், திலகர், பாரதி.... என இவர்கள் எல்லோரும் கீதைக்கு உரை எழுதியதும், குதிராம் போஸ் என்கிற முதற்கட்ட தூக்குமேடைப் போராளி பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தூக்கு மேடை ஏறியபோது கடைசி விருப்பாகக் கையில் கீதைப் பிரதியை வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரியதும் வரலாறு. 

பாலகங்காதர திலகர்

ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் காந்தி சகாப்தம் தோன்றுகிறது. இந்தியா முழுவதும் தன்னிச்சையாக நடைபெற்றுக்கொண்டிருந்த வெகுஜனப் போராட்டங்களின் மீது அவர் கவனம் கொள்கிறார். எல்லாவற்றிலும் பங்குகொள்கிறார். மிதவாதி என அழைக்கப்பட்ட கோகலேயை அவர் தன் வழிகாட்டியாய்த் தேர்வு செய்கிறார். கிலாஃபத் இயக்கம்  - என ஒரு முஸ்லிம் பிரச்னையை - முன்வைத்து இந்திய மண்ணில் தன் அரசியலைத் தொடங்குகிறார். முஸ்லிம்கள், அடித்தள மக்கள், பெரிய எண்ணிக்கையில் பெண்கள் என அவரது சத்தியாக்கிரகப் போராட்டங்கள் இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின.

இந்தப் பின்னணியில் காந்தியும் ஒரு கீதை உரையை எழுதுகிறார். 

``கீதையின் பாடுபொருள் போரை விவரிப்பதோ, வன்முறையை நியாயப்படுத்துவதோ இல்லை என்பதால், அதற்கு (அதாவது வன்முறைக்கு - அ.மா) அதிக முக்கியத்துவம் அளிப்பது முற்றிலும் தவறு. தவிரவும் கீதை அஹிம்சையை வலியுறுத்துகிறது எனச் சொல்வதற்குச் சில சுலோகங்கள் இடைஞ்சலாக இருக்கின்றன என்றால் அது வன்முறையை நியாயப்படுத்துகிறது என்று சொல்வதற்கு நூலின் ஒட்டுமொத்தக் கருத்தும் இடைஞ்சலாக உள்ளது. ஒட்டுமொத்தமாக கீதை சொல்லும் செய்தி வன்முறை அல்ல அஹிம்சையே" என கீதையின் ஒட்டு மொத்தக் கருத்து வன்முறை அல்ல என வாதிட்டார் காந்தி (நவஜீவன், அக்டோபர் 11, 1925). அந்த வகையில் கீதையில் உள்ள பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சில சுலோகங்களை நீக்கி உரை எழுதினார் மகாத்மா. 

குழந்தைத் திருமணத்தை ஆதரித்தும், பெண்களைத் தாழ்த்தியும் மனு முதலான ஸ்மிருதிகள் கூறியுள்ளவற்றை, 'பிரபஞ்ச உண்மைகளுக்கும் அறங்களுக்கும் எதிரானவை' எனவும், 'பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை', 'இடைச் செருகல்களாகப் புறக்கணிக்க வேண்டும்' என்றெல்லாமும் அவற்றைக் கண்டித்தவர் காந்தி (ஹரிஜன், நவம்பர் 16, 1935) என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

காந்தி முன்வைத்த இந்த அடிப்படையிலான அரசியல் திலகரின் அரசியலிலிருந்து சுதந்திரப் போராட்டத்தைத் திசை மாற்றியது. அந்தவகையில் 'அரசியலை' 'அறசியலாக' மாற்றிட அமைத்ததுதான் காந்தியை, மகாத்மா என அழைப்பதின் அடிப்படையாகிறது.

இதைக் கண்டு எரிச்சலுற்ற திலகர், காந்தியை நோக்கிச் சொன்ன கீழ்க்கண்ட கூற்று காந்தியின் அரசியலை மட்டுமல்ல... திலகரின் அரசியல் எத்தகையது எனவும் புரிந்துகொள்ள உதவும். அது : 

"அரசியல் சாதுக்களுக்கான இடமல்ல". (யங் இந்தியா, 1920 ஜனவரி 28)


டிரெண்டிங் @ விகடன்