வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (15/05/2018)

கடைசி தொடர்பு:18:26 (15/05/2018)

ரைஸ்மில் கிளர்க், முதல் மனைவி மர்ம மரணம் வரை... யார் இந்த எடியூரப்பா ?

எடியூரப்பாவின் சொந்த வாழ்க்கை , அரசியல் வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி சிறைக்குள் சென்றுள்ளார்.

ரைஸ்மில் கிளர்க், முதல் மனைவி மர்ம மரணம் வரை... யார் இந்த எடியூரப்பா ?

பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றால், பி.எஸ். எடியூரப்பா தலைமையில் புதிய ஆட்சி அமையும். கர்நாடகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் எடியூரப்பாவும் ஒருவர். இவரின், சொந்த வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கை வரை சர்ச்சைகளால் நிறைந்தது.  மாண்ட்யா மாவட்டம் கே.ஆர்.பேட் தாலுக்காவில் உள்ள பொக்கனாகரே என்கிற கிராமம்தான், எடியூரப்பாவின் சொந்த ஊர். 1943-ம் ஆண்டு பிறந்தவர். பட்டப்படிப்பு முடித்தவுடன் ரைஸ்மில் ஒன்றில் கிளர்க்காக வேலைக்குச் சேர்ந்தார். அப்போதே ஜனசங்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். 1972-ம் ஆண்டு, கே.ஆர். பேட் தாலுக்கா ஜனசங் தலைவராகப் பொறுபேற்றார்.

எடியூரப்பா

1975-ம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில், 45 நாள்கள் சிறையில் அடைபட்டுக்கிடந்தார்.  1983- ம் ஆண்டு முதல் 6  முறை தொடர்ச்சியாக ஷிகாரிபுரா தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-ம் ஆண்டு, கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராகி,  1994-ம் ஆண்டு எதிர்கட்சித் தலைவர் ஆனார். 2004-ம் ஆண்டு, கர்நாடகத்தில் தரம்சிங் முதல்வராக இருந்தார். தரம்சிங்கை பதவியிலிருந்து அகற்ற, எடியூரப்பா விசித்திர முறையைக் கையாண்டார். இதற்காக, ஹெச்.டி.தேவகவுடாவின் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கைகோத்தார். ஒப்பந்தப்படி, முதல் 20 மாதங்கள் மதச் சார்பற்ற கட்சித் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி முதல்வர் பதவியில் இருந்தார். 20 மாதங்கள் கழிந்த பிறகு, முதல்வர் பதவியிலிருந்து விலக குமாரசாமி மறுத்தார். 

இதனால் எடியூரப்பா, குமாரசாமி அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டார். இருப்பினும், இரு கட்சிகளும் மீண்டும் அமர்ந்து பேசி, கருத்து வேறுபாடுகளைக் களைந்தன. 2007-ம் ஆண்டு, குமாரசாமி ஆதரவுடன் எடியூரப்பா முதல்வர் பதவியில் அமர்ந்தார். 2011-ம் ஆண்டு மீண்டும் எடியூரப்பாவுக்கும் குமாரசாமிக்கும் மோதல் முட்டியது. ஆதரவை குமாரசாமி விலக்கிக்கொள்ள, முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமாசெய்தார்.

தாது சுரங்கங்களுக்கு அனுமதி அளித்த  விவகாரத்தில், எடியூரப்பா பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் எடியூரப்பாவை கர்நாடக மாநில லோக்ஆயுக்தா நீதிமன்றம் சிறைக்கு அனுப்பியது. சிறைத்தண்டனைக்குள்ளான முதல்  கர்நாடக முன்னாள் முதல்வர் என்கிற அவப்பெயர், எடியூரப்பாவுக்குக் கிடைத்தது. பெங்களூரு சிறையில் எடியூரப்பா 20 நாள்கள் கழித்தார். 

2012-ம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய எடியூரப்பா, 'கர்நாடக ஜனதா பக் ஷா' என்ற பெயரில் தனிக்கட்சி கண்டார். 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாகத் தன் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார். பிறகு, மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தலைவராகி, மீண்டும் முதல்வர் ஆகப்போகிறார். . எடியூரப்பாவுக்கு மித்ரா தேவி என்ற மனைவி உண்டு. 2004-ம் ஆண்டு ஷிமோகோவாவில் உள்ள வீட்டில் கிணறு அருகே மித்ராதேவி மர்மமான முறையில் இறந்தகிடந்தார். இவருக்கு அருணாதேவி, பத்மாதேவி, உமாதேவி என்ற  மூன்று மகள்களும், ரகவேந்திரா, விஜயேந்திரா என்கிற இரு மகன்களும்  உண்டு.

தென்னிந்தியாவில், பாரதிய ஜனதா கட்சியின் முதல் முதல்வர் என்ற பெயரை ஏற்கெனவே இவர் பெற்றுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க