Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காங்கிரஸுக்குக் குழிபறித்த கனிமவள மாஃபியா! - ஜனார்த்தன ரெட்டியின் வியூகம் #KarnatakaVerdict

 

``கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை விரட்டுவதே எனது முதல் குறிக்கோள்” இது கர்நாடகத்தில் கனிமவள சாம்ராஜ்யம் நடத்திவரும் ஜனார்த்தன ரெட்டி  கூறிய வார்த்தைகள். அதையே கர்நாடக தேர்தல் முடிவும் பிரதிபலித்துள்ளது. 

ஜனார்த்தன ரெட்டி

கர்நாடகாவில் ஆந்திரப் பகுதியை ஒட்டியுள்ள பல்லாரி பகுதியில், பி.ஜே.பி-யின் செல்வாக்கான முகமாக இருந்த ஜனார்த்தன ரெட்டி குடும்பத்தினர் மீது எழுந்த ஊழல் புகாரால் அவர்கள் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாகவே கடந்த முறை பி.ஜே.பி கர்நாடகத்தில் படுதோல்வி அடைந்தது. கர்நாடகாவில் மீண்டும் காவிக்கொடி பறக்கவேண்டும் என்றால், ரெட்டியின் சேவை தங்களுக்குத் தேவை என்பதை பி.ஜே.பி-யின் அகில இந்திய தலைவர் அமித் ஷா உணர்ந்திருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே கர்நாடகத் தேர்தலில் கவனம் செலுத்திவந்த அமித் ஷா, ரெட்டி சகோதரர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ஜனார்த்தன ரெட்டியிடம் `பி.ஜே.பி வெற்றிக்கு உதவ வேண்டும்' என்று அமித் ஷா கேட்டுள்ளார். அதன்பிறகே, ரெட்டியின் கரன்சி தாண்டவத்தைக் கர்நாடகா பார்க்க ஆரம்பித்தது. 

கர்நாடக தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்குப் பணப்புழக்கம் இருந்ததை அனைவருமே ஒப்புக்கொண்டனர். அதற்குப் பின்னணியாக இருந்ததாக ரெட்டி சகோதரர்கள் மீது புகார் எழுந்தது. ஆனால், கர்நாடகத் தேர்தலில் தனது செல்வாக்கை மீண்டும் காட்ட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஜனார்த்தன ரெட்டி, தனது தம்பி உட்பட ஆதரவாளர்கள் எட்டுப் பேருக்கு பி.ஜே.பி-யில் சீட் வாங்கிக் கொடுத்தார். எடியூரப்பாவினால் தனது மகனுக்குக்கூட சீட் வாங்க முடியாத நிலையில் ரெட்டியின் இந்தச் செல்வாக்கு எடியூரப்பாவுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும், தனது தொழில் முறை நண்பரான ஸ்ரீராமுலுவை சித்தராமையாவுக்கு எதிராக பதாமி தொகுதியில் நிறுத்தியுள்ளார் ரெட்டி. பல்லாரிக்குள் நுழைவதற்கே உச்சநீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்ட ஜனார்த்தன ரெட்டி, பல்லாரிக்கு அருகில் மொலக்கல்முருவில் உள்ள தனது பண்ணை வீட்டிலிருந்து பி.ஜே.பி-யின் தேர்தல் வியூகத்தை கச்சிதமாக அமைத்துவந்தார்.

பல்லாரி பகுதியில் மட்டுமல்ல, பெங்களூரு பகுதியிலும் ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமான நபர்களையே தேர்தல் களத்தில் பி.ஜே.பி  நிறுத்தியுள்ளது என்றால், ரெட்டியின் செல்வாக்கு இந்தத் தேர்தலில் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.  

16,000 கோடி சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் ரெட்டியை தேர்தல் களத்தில் பி.ஜே.பி பயன்படுத்திவருகிறது என்று ராகுல் உட்பட பலரும் குற்றம் சாட்டியபோதும், அதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை பி.ஜே.பி. மாறாக அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ``ரெட்டியின் சேவை எங்களுக்குத் தேவை. அவர் பிரசாரம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை'' என்று ஓபனாகக் கருத்து தெரிவித்தார். பல்லாரி பகுதியில் உள்ள எட்டுத் தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருந்த நிலையில், இந்த முறை பல்லாரி பகுதியை காங்கிரஸ் கட்சியிடம் விடக் கூடாது என்பதில் ரெட்டி சகோதரர்கள் தீவிரமாக இருந்தனர். அதற்கானப் பரிசாக இப்போது வெற்றியும் கிட்டியுள்ளது. 

ஜனார்த்தன ரெட்டி

பி.ஜே.பி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே ஜனார்த்தன ரெட்டி, `45 தொகுதிகளுக்கான பொறுப்பை பி.ஜே.பி என்னிடமே வழங்கியுள்ளது' என்று ஓபனாகப் பேசி அதிரவைத்தார். ஆனால், பி.ஜே.பி தரப்பிலிருந்து அதற்கு மறுப்பேதும் கொடுக்கப்படவில்லை. அதேபோல், கடந்த ஐந்தாண்டுகளாக வழக்கு ஒருபுறம், மறுபுறம் சுரங்கத் தொழிலை நடத்த முடியாத நிலை என இருதலைக் கொள்ளியாகத் தவித்து வந்த ஜனார்த்தன ரெட்டி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கணக்கில், பி.ஜே.பி-க்கு ஆதரவாகக் களத்தில் இறங்கி வழக்கையும் நீர்த்துப் போகச் செய்து, தொழிலையும் வளப்படுத்த திட்டமிட்டுள்ளார். மேலும் பி.ஜே.பி- க்குத் தேர்தல் நிதியாக ரெட்டி தரப்பிலிருந்து ஏராளமானப் பொருளுதவியும் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பலனாகவே ரெட்டி குடும்பத்திலிருந்தே ஏழு பேருக்கு பி.ஜே.பி டிக்கெட் கொடுத்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலிலும் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்துள்ளன. குறிப்பாக பல்லாரி பகுதியில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் மீதும், ரெட்டி மீது உள்ள அதே சுரங்க ஊழல் முறைகேடு உள்ளது. எனவே, ஊழல் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியும் பூதாகரமாக்க முடியாது என்பதை பி.ஜே.பி நன்றாகவே உணர்ந்திருந்தது. அதனால்தான் அமித் ஷா அதிரடியாக வியூகம் அமைத்து ரெட்டியைத் தங்கள் வசம் கொண்டு வந்து கர்நாடகத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்துள்ளார். கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைக் காவு வாங்கியதில் ரெட்டியின் பங்கே பிரதானம் என்று சிலாகிக்கிறார்கள் அங்குள்ள பி.ஜே.பி-யினர்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement