வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (15/05/2018)

கடைசி தொடர்பு:20:21 (15/05/2018)

நல்ல தொடக்கத்திற்குப் பின் துவண்டது சந்தை !

கர்நாடக சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையான நிலையை அடையக்கூடிய சாத்தியக்கூறு உருவான நிலையில், மளமளவென்று உயர்ந்த இந்திய பங்குச் சந்தை, இன்று பிற்பகலில், காங்கிரஸ் - ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு பற்றி பேச்சு வார்த்தை நடத்தும் செய்தி வந்தபின், வேகமாகச் சரிந்து தன்னுடைய லாபங்களை இழந்தது.

ஒரு கட்டத்தில் 430 புள்ளிகளுக்கு மேல் முன்னேறி 35,993.53 என்ற நிலையை எட்டிய மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், இறுதியில் 35,543.94 என்று 12.77 புள்ளிகள் அதாவது 0.04 சதவிகிதம் நஷ்டத்துடன் முடிவுற்றது.

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 4.75 புள்ளிகள் அதாவது 0.04 சதவிகிதம் இழப்புடன் 10,801.85-ல் முடிந்தது. இன்று ஒரு கட்டத்தில் இக்குறியீடு 120 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 10,929.20 என்று இருந்தது.

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் தொய்வடைந்த நிலையில் இருந்ததும், அமெரிக்க - சீன வர்த்தக உறவு பற்றிய நிச்சயமற்ற தன்மை, பெரிதளவில் உற்சாகமூட்டக்கூடியதாக இல்லாத காலாண்டு அறிக்கைகள் ஆகியவையும் சந்தை தன்னுடைய உயர் நிலையிலிருந்து நழுவியதற்கு காரணங்களாக அமைந்தன என்று கூறலாம். 

மேலும் சமீபத்தில் வெளியான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் பற்றிய அறிக்கைகளும் ஏமாற்றமளிக்கக் கூடியவையாகவும், வட்டிவிகித உயர்வுக்கு வழி செய்யும் வகையில் இருப்பதாகவும் அமைந்திருப்பதும் முதலீட்டாளர்களின் மனதில் ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவித்திருக்கிறது.

தவிர, அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து 67.91 என்று நிலைக்கு வந்ததும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தே காணப்படுவதும் கூட சந்தையின் குறுகிய கால செயல்பாடு குறித்த ஓர் ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

டாடா ஸ்டீல்  2:75%
பவர் கிரிட் கார்ப்பொரேஷன் 2.4%
பஜாஜ் பைனான்ஸ் 1.9%
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 1.6%
ஏசியன் பெயின்ட்ஸ் 1.3%
லூப்பின் 1.3%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 1.25%
டைட்டன் 1.2%
டி மார்ட்  4.5%
கோல்கேட் பால்மாலிவ் 4%
சீமென்ஸ் 3.4%
பிராக்டர் & காம்பிள் 3.2%
ஐடியா செல்லுலார் 2.7%


விலை இறங்கிய பங்குகள் :

டாடா மோட்டார்ஸ் 4%
ஸ்டேட் பேங்க் 2.8%
கோல் இந்தியா 2.3%
பஞ்சாப் நேஷனல் பேங்க் 6.1%
பாரத் எலக்ட்ரானிக்ஸ் 4.6%
பவர் பைனான்ஸ் கார்ப்பொரேஷன் 4.3%
ஆரக்கிள் பைனான்ஸியல் சர்வீசஸ் 4%
கும்மின்ஸ் 3.5%

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1028 பங்குகள் விலை உயர்ந்தன. 1611 பங்குகள் விலையிறங்கியும் 140 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமல் முடிந்தன.