தேவ கவுடாவுக்கு பா.ஜ.க ஆதரவளித்தால் என்ன நடக்கும்? | possible scenarios for new government formation in Karnataka

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (16/05/2018)

கடைசி தொடர்பு:16:10 (16/05/2018)

தேவ கவுடாவுக்கு பா.ஜ.க ஆதரவளித்தால் என்ன நடக்கும்?

கர்நாடகத்தில் இனி என்ன நடக்கும்?

தேவ கவுடாவுக்கு பா.ஜ.க ஆதரவளித்தால் என்ன நடக்கும்?

ர்நாடகத்தில் 1985-ம் ஆண்டுக்குப் பிறகு, எந்தக் கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததில்லை. தென்னிந்தியாவில் ஓரளவுக்கு பாரதிய ஜனதா கட்சிக்கு கர்நாடக மாநிலத்தில் செல்வாக்கு இருந்தது. கர்நாடகம் வழியாகத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலூன்ற வேண்டுமென்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம். ஆந்திராவில் தெலுங்கு தேசத்துடன் பாரதிய ஜனதா கட்சி அமைத்த கூட்டணி முறிந்துவிட்ட காரணத்தால், கர்நாடக வெற்றியைப் பாரதிய ஜனதா கட்சி கௌரவப் பிரச்னையாகவே பார்த்தது. பாரதிய ஜனதாவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தாலும், ஆட்சி அமைக்க முடியாதது பலத்த அடியே!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்

தற்போதையச் சூழலில் பாரதிய ஜனதா 104 தொகுதிகளையும் காங்கிரஸ் 78 தொகுதிகளையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளையும் பெற்றுள்ளன. மற்றவர்கள் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைக்கத் தேவைப்படும் 112 தொகுதி மெஜாரிட்டி பா.ஜ.க-வுக்கு இல்லை. சுருங்கச் சொன்னால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. 

இங்கே மற்றொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். ஒருவேளை மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து கர்நாடகத்திலும் மத்தியிலும் ஆட்சியில் பங்கு பெறலாம். அப்படி செய்தால் மத்தியிலும் மாநிலத்திலும் மதசார்பற்ற ஜனதா தளம்  அமைச்சரவையில் சில இலாக்காகளைக் கேட்டு வாங்க முடியும். பாரதிய ஜனதா கட்சிக்கு கர்நாடக மக்களிடையே செல்வாக்கு உயர்ந்திருப்பதால், தேவகவுடா இந்தக் கணக்கைப் போடக் கூடும். அப்படி காய் நகர்த்தும் பட்சத்தில் கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி.குமாரசாமிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம். 

2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சி பொறுமையைக் கடைப்பிடித்து மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவளிக்க முன்வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கக் கூடாது என்பதற்காகக் காங்கிரஸ் செய்யும் உள்ளடி வேலைகளைப் பாரதிய ஜனதா கட்சியும் செய்யத் தவறாது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்கும்பட்சத்தில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தலைதூக்க முடியாமல் செய்துவிடலாம் . காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் எண்ணிக்கை மூன்றாகச் சுருங்கிவிடும். பஞ்சாப், புதுச்சேரி, மிசோரம் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும். 

பெரும்பான்மையான தொகுதிகளில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் கர்நாடக மாநில ஆளுநர் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியை உடைக்கும் வேலையில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபடலாம் அல்லது காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க