ஐதராபாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: பலி 16 ஆக அதிகரிப்பு

ஐதாராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை தொடர் குண்டு வெடிப்பில பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது. 

இந்தச் சம்பவத்தில் 119 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தில்சுக்நகர் பஸ் நிலையம் அருகே இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இங்குள்ள கொனார்க் திரையரங்கம் அருகே உள்ள சாலையோர உணவகத்தில் முதலாவது குண்டு வெடித்தது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் குண்டு வெடித்ததால் ஏற்பட்ட பதற்றமான சூழலில் நெரிசல் ஏற்பட்டது.

குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் வேன் மூலம் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முதலாவது குண்டு வியாழக்கிழமை இரவு 7.01 மணி அளவில் நிகழ்ந்தது.இதைத் தொடர்ந்து 5 நிமிட இடைவெளியில் இரண்டாவது குண்டு வெடித்தது. முதலாவது குண்டு வெடிப்பில் 8 பேரும், இரண்டாவதாக குண்டு வெடித்ததில் 4 பேரும் உயிரிழந்தனர். பின்னர், பலி எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) 16 ஆக அதிகரித்தது.

குண்டு வெடிப்பு பற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டு வெடிக்கச் செய்திருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்குச் சென்ற ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

தேசிய பாதுகாப்புப் படை


குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) வீரர்கள், தடயவியல் நிபுணர்களும் டெல்லியிலிருந்து பிஎஸ்எப் விமானம் மூலம் ஐதராபாதுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே. சிங் தெரிவித்தார். குண்டு வெடிப்புக்கு பிந்தைய ஆய்வுக் குழுவினரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இது தவிர, சென்னையிலிருந்து கருப்புப்பூனைப் படை பிரிவின் கமாண்டோக்களும் ஐதராபாத் விரைந்துள்ளனர். ஹைதராபாதில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணை என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய நகரங்களில் பாதுகாப்பு தீவிரம்

ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி, மும்பை,பெங்களூர்,சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், திருமலையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் கண்டனம்

குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு கண்டனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், பொதுமக்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்தார்.

ரூ. 2 லட்சம் நிவாரணம்

குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இதுவரை இந்தச் சம்பவத்துக்கு எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!