கர்நாடக முதல்வராக நாளை பதவியேற்கிறார் எடியூரப்பா! - பா.ஜ.க. எம்.எல்.ஏ-வின் ட்வீட்டால் சர்ச்சை

கர்நாடக முதலமைச்சராக பா.ஜ.க-வின் எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்குப் பதவியேற்க இருப்பதாக ராஜாஜி நகர் பா.ஜ.க. எம்.எல்.ஏ-வான சுரேஷ்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

எடியூரப்பா

கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 12-ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும், மற்றவர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். ஆட்சியமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத சூழலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம், தங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதேபோல், 104 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட பா.ஜ.கவின் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

இந்தநிலையில், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா நாளை காலை 9.30 மணியளவில் பதவியேற்க இருப்பதாக, ராஜாஜி நகர் எம்.எல்.ஏ சுரேஷ் குமார் மற்றும் கர்நாடக பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்பட்டது. ஆனால், சிறிதுநேரத்தில் அந்தப் பதிவுகள் டெலிட் செய்யப்பட்டன. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!