வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (17/05/2018)

கடைசி தொடர்பு:20:22 (17/05/2018)

`இந்திய ஜனநாயகத்தின் கறுப்புநாள் இன்று' - கர்நாடக ஆளுநரின் முடிவுக்கு பினராயி விஜயன் எதிர்ப்பு!

பினராயி விஜயன்

ர்நாடகத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பெறாத பா.ஜ.க., ஆட்சியில் அமரப்போகிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்திருக்கிறார், கர்நாடக கவர்னர் வாஜுபாய் வாலா. முன்னதாக, ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜ.க 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ம.ஜ.த 37 இடங்களிலும், மற்றவர்கள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றனர். ஆட்சியமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத சூழலில், மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இந்த ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதேபோல, 104 எம்.எல்.ஏ-க்களைக்கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், ஆளுநர் வாஜுபாய், எடியூரப்பாவுக்கு ஆதரவான முடிவை எடுத்திருந்தார்.

இந்நிலையில், கவர்னரின் முடிவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் மனு அளித்தார். அவசர வழக்காக இன்று இரவு 1 மணிக்கு மேல் விசாரணை தொடங்கியது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள், எடியூரப்பா பதவியேற்கத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இன்று காலை, கர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார் எடியூரப்பா. இதற்கிடையே கர்நாடக ஆளுநரின் முடிவுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ``இன்று கர்நாடக மாநிலத்தின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். இதுமாதிரியான செயல்பாடுகள் கவர்னர் என்ற பதவியின் உயர்வைக் கீழிறக்கிவிடும். ஆளுநரின் இந்த முடிவு, குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும்; ஜனநாயகத்தின் மீதான மாண்புகளைச் சீர்குலைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.