வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (17/05/2018)

கடைசி தொடர்பு:09:18 (17/05/2018)

எடியூரப்பா பதவியேற்புக்குத் தயாராகும் ஆளுநர் மாளிகை..! போலீஸார் குவிப்பு

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள், அம்மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுவருகிறது.

ஆளுநர் மாளிகை

கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக 104 எம்.எல்.ஏ-க்களைப் பெற்ற பா.ஜ.க-வை ஆட்சியமைக்க அழைத்தார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா. அவருடைய இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், எடியூரப்பா பதவியேற்பதற்குத் தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதமன்றம் உத்தரவிட்டது. 

ஆளுநர் மாளிகை

அதையடுத்து, இன்று காலை 9 மணிக்கு, ஆளுநர் மாளிகையிலுள்ள கண்ணாடி அறையில், கர்நாடக மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுவருகின்றன. ஆளுநர் மாளிகையைச் சுற்றிய பகுதிகளில், பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் பணிபுரியும் காவலர்கள் யாரும் இன்று விடுப்பு எடுக்கக் கூடாது என்று காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர். பொதுவாக, பா.ஜ.க ஆட்சியமைக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி கலந்துகொள்வது வழக்கம். பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவசர அவசரமாக எடியூரப்பா பதவியேற்பதால், இந்த விழாவில் மோடி பங்கேற்கவில்லை.