வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (17/05/2018)

கடைசி தொடர்பு:18:47 (17/05/2018)

சந்தையில் மீண்டும் சரிவு!

மெட்டல், எப்.எம்.சி.ஜி, ஆயில் மற்றும் வங்கித் துறைகளைச் சேர்ந்த சில முக்கிய பங்குகள் இன்றைய வணிகத்தில் பலவீனமடைந்ததன் காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தை கணிசமாக சரிந்து நஷ்டத்தில் முடிவுற்றது.

மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 238.76 புள்ளிகள் அதாவது 0.67 சதவிகிதம் சரிந்து 35,149.12 என முடிவுற்றது.
தேசிய பங்குச்சந்தையின் நிஃப்ட்டி 58.40 புள்ளிகள் அதாவது 0.54 சதவிகிதம் குறைந்து 10,682,79-ல் முடிந்தது.

வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை பற்றிய ஒரு நிச்சயமற்ற தன்மை இருப்பதால், சர்வதேச அரசியல் அரங்கில் மீண்டும் ஒரு டென்ஷன் உருவாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், ஏற்கெனவே கவலையளிக்கக்கூடிய வகையில் இருக்கும் இந்தியாவின் பணவீக்க விகிதம் மேலும் உயரக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. இது வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கியை நிர்பந்தப்படுத்தக்கூடும் என்ற பயத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி பதவி ஏற்றிருப்பினும், விரைவிலேயே அக்கட்சி தன் பலத்தை நிரூபித்தாக வேண்டிய நிலையில் இருப்பதால், அரசியல் அரங்கில் நிலவும் குழப்பமான சூழலும் முதலீட்டாளர்களை ஒரு ஜாக்கிரதை உணர்விலேயே வைத்திருக்கிறது எனலாம்.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,392 பங்குகள் விலை உயர்ந்தன. 1,232 பங்குகள் விலையிறங்கியும், 130 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

விலை அதிகரித்த பங்குகள் :

பஜாஜ் பைனான்ஸ் 7.8%
பஜாஜ் பைனான்சியல் சர்வீசஸ் 4.5%
கோல் இந்தியா 3%
சன் பார்மா 2.8%
பார்தி இன்ஃப்ராடெல் 1.6%
டாடா மோட்டார்ஸ் 1.4%
விப்ரோ 1.3%
ஓ.என்.ஜி.சி  1.2%
பெட்ரோனெட் 8%

விலை இறங்கிய பங்குகள் :

ஹின்டால்க்கோ 3.1%
யூ.பி.எல். 2.6%
ஐ.டி.சி. 2.3%
ஆக்ஸிஸ் பேங்க் 2.3%
எச்.எப்.டி.சி 2%
பாரத் பெட்ரோலியம் 2%
பார்தி ஏர்டெல் 1.9%
டாடா ஸ்டீல் 1.7%