`அவர் வெறும் ஒருநாள் முதல்வர் மட்டுமே' - எடியூரப்பாவை சாடும் காங்கிரஸ்!

எடியூரப்பா வெறும் ஒரு நாள் முதல்வர் மட்டுமே. அவரது முதல்வர் பதவி நீடிக்காது என காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. 

எடியூரப்பா

கடும் எதிர்ப்புகளையும் மீறி அமைச்சரவை சகாக்கள் யாரும் இல்லாமல் கர்நாடக முதல்வராகப் பா.ஜ.க-வைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றுள்ளார். பதவியேற்றதும் முதல்வேலையாக ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டதுடன், ஆளுநர் அளித்த 15 நாள் அவகாசம் தேவையில்லாதது. ஓரிரு நாள்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம் எனக் கூறியுள்ளார். ஆளுநரின் அவகாசம் ஒருபுறம் இருந்தாலும், எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தற்போது அவர் தலை மேல் தொங்கும் கத்தியாக உள்ளது.

நேற்று நள்ளிரவில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில்,  ``ஆளுநர் பதவியேற்க சொல்பவரைத் தடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், பதவியேற்ற பிறகு அவரின் செயலை தடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. எனவே, இன்று காலை 10.30 மணிக்குள் ஆளுநரிடம் அளித்த எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தை எடியூரப்பா சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறி வழக்கின் தீர்ப்பை  ஒத்திவைத்தது. இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பே எடியூரப்பாவுக்கு சிக்கல் காத்திருக்கிறது. 

இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவை விமர்சித்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில்,  ``மோடி, அமித் ஷாவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் எடியூரப்பாவை இன்றே பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டும். அப்படி அவர்கள் செய்தால் பா.ஜ.க கண்டிப்பாக தோற்றுவிடும். குறுக்கு வழியில் பதவியைப் பிடித்துள்ள பா.ஜ.க-வால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்கும் விசாரணைக்குப் பின் எடியூரப்பா பதவி விலக நேரிடும். எனவே, அவர் வெறும் ஒரு நாள் முதல்வர் மட்டுமே. பா.ஜ.க-வின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும்"  என்று அவர் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!