"8 தொகுதிகளில் நோட்டாவால் வீழ்ந்த பா.ஜ.க.!" சுப்ரமணியன் சுவாமி கிளப்பிய சர்ச்சை | Subramaniya Swamy's tweet against BJP went viral

வெளியிடப்பட்ட நேரம்: 20:13 (18/05/2018)

கடைசி தொடர்பு:20:13 (18/05/2018)

"8 தொகுதிகளில் நோட்டாவால் வீழ்ந்த பா.ஜ.க.!" சுப்ரமணியன் சுவாமி கிளப்பிய சர்ச்சை

சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பெயர்போனவர் சுப்பிரமணியன் சுவாமி. பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களுள் ஒருவராக விளங்கும் இவர், தற்போது பதிந்திருக்கும் ட்வீட் மூலம் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார்.

"இவர் பேச்சை பி.ஜே.பி-யின் பேச்சாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' என்று பலநேரங்களில் அந்தக் கட்சியின் தலைமை அறிக்கை சொல்லுமளவுக்குப் பல்வேறு சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பெயர்போனவர் சுப்பிரமணியன் சுவாமி. பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களுள் ஒருவராக விளங்கும் இவர், தற்போது பதிந்திருக்கும் ட்வீட் மூலம் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார்.

கர்நாடகாவில் தற்போது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், பி.ஜே.பி. பெரும்பான்மையைப் பெறாமல் போனது குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. "நோட்டாவைவிடக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் எட்டுத் தொகுதிகளில் பி.ஜே.பி. தோல்வியடைந்துள்ளது. என்னைத் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதித்திருந்தால், இப்படி நடந்திருக்காது. எனக்கிருக்கும் செல்வாக்கை `டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி விவாதம் நிரூபிக்கிறது” என அதில் பதிவிட்டுள்ளார். 

கடந்த வாரம் நடைபெற்ற கர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி. அதிகத் தொகுதிகளில் வென்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறது. அதேவேளையில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான அனைத்துத் தகுதிகளுடன் இருக்கிறது. இந்த நிலையில், இருவருமே அந்த மாநில கவர்னரைச் சந்தித்து ஆட்சியமைக்கக் கோரினர். இதையடுத்து, எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்த அந்த மாநில கவர்னர், அவருக்குப் பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார்.

நோட்டா

இந்த நிலையில், பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியை எப்படி ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், எடியூரப்பா தலைமையிலான ஆட்சி நாளை (19- ம் தேதி) மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வேலைகளைச் செய்துவருகிறது அந்த மாநில பி.ஜே.பி. அத்துடன், பெரும்பான்மையை நிரூபிக்க 21-ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், பெரும்பான்மை பலம் இல்லாமலிருக்கும் பி.ஜே.பி-யைக் காயப்படுத்தும் விதமாக சுப்பிரமணியன் சுவாமி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

சரி, உண்மையிலேயே 8 தொகுதிகளில் நோட்டாவைவிட பி.ஜே.பி-யின் தோல்வி வித்தியாசம் குறைவா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் பதில். கர்நாடகா தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டும்தான் பி.ஜே.பி-யின் தோல்வி வித்தியாசத்தைவிட நோட்டா அதிக வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் 3, ஜனதா தளம் 1 என்று நோட்டா, வாக்கு வித்தியாசத்தை வென்றுள்ளது. ஒட்டுமொத்த கர்நாடகாவில் வாக்கு வித்தியாசத்தைவிட நோட்டா வென்றுள்ளது. 

சுவாமி

மேலும், சுப்பிரமணியன் சுவாமியைத் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்காதது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பி.ஜே.பி. நோட்டாவைவிட வாக்குகள் குறைவாகப் பெற்றதை அவர் ட்விட்டரில் கேலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

`தமிழ் பொறுக்கீஸ்' என்று தமிழர்களை விமர்சிக்கும்போது அமைதியாக இருந்த பி.ஜே.பி. அரசு, ``அது அவரது தனிப்பட்ட கருத்து'' என்றது. இப்போது விமர்சனமே பி.ஜே.பி. மீதுதான் என்கிறபோது என்ன செய்யப்போகிறது அந்தக் கட்சியின் தலைமை? கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும் இந்தவேளையில், சுப்பிரமணியன் சுவாமியின் பதிவு பி.ஜே.பி-யினரிடம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

எதிர்க்கட்சியை எதிர்த்தால் சுப்பிரமணிய சுவாமி பாஜக மூத்த தலைவர் என்பதும், சர்ச்சைகளோ, உள்கட்சி விமர்சனமோ சுப்பிரமணிய சுவாமி தனிநபர் என்பதும், பாஜக-வுக்கும் கேட்கும் மக்களுக்கும் புதிதல்ல. இந்த முறை விமர்சனம் கட்சி மீது... என்ன செய்யப்போகிறார்களோ இந்தத் தனிநபர் கருத்து மீது!


டிரெண்டிங் @ விகடன்