`கே.ஜி போபையா நியமனத்துக்கு எதிராக வழக்கு' - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி போபையா நியமிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ், ம.ஜ.த தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 

கே ஜி போபையா

தேர்தலுக்கு முன்பை விடத் தேர்தலுக்கு பின்புதான் கர்நாடக அரசியலில் புயல் வீசி வருகிறது. பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க-வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததுதான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். எது என்னவென்றாலும் இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்வு ஏற்படுத்திவிடும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மாலை முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். முன்னதாக மூத்த எம்.எல்.ஏ ஒருவரைச் சபாநாயகராக நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அந்தவகையில்,  பா.ஜ.க. எம்.எல்.ஏ கே.ஜி போபையாவை தற்காலிக சபாநாயராக நியமித்து, அவருக்கு நேற்று பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா. இந்த கே.ஜி போபையா மீது ஏற்கெனவே 2009 - 13 காலகட்டங்களில் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்க உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்து, அதற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதைக் காரணம் காட்டி காங்கிரஸ், ம.ஜ.த கட்சிகள் போபையா நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ், ம.ஜ.த சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் போபையா வழக்கை அவசர வழக்காக இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது. இதனால் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!