வெளியிடப்பட்ட நேரம்: 05:08 (19/05/2018)

கடைசி தொடர்பு:07:14 (19/05/2018)

`பா.ஜ.க.வுக்கு வாருங்கள்; 100 மடங்கு வளர்ச்சி கிடைக்கும்' - ஜனார்த்தன் ரெட்டியின் சர்ச்சை ஆடியோ!

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் விதமாகப் பா.ஜ.க சார்பில் சுரங்க ஊழலில் சிறைக்குச் சென்ற ஜனார்த்தன் ரெட்டி பேரம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜனார்த்தன் ரெட்டி

உச்ச நீதிமன்றம் விதித்த கெடுப்படி எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்.எல்.ஏ-க்கள் தேவை என்கிற நிலையில் பா.ஜ.க-விடம் 104 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று 5 ஆண்டுகள் ஆட்சியைத் தொடருவேன் என எடியூரப்பா கூறி வருகிறார். இதற்கிடையே, எங்களது எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் விதமாக அவர்களிடம் பா.ஜ.க ரூ.100 கோடி வரை பேரம் பேசிவருவதாகக் குமாரசாமியும், சித்தராமையாவும் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், சுரங்க ஊழலில் சிறைக்குச் சென்ற ஜனார்த்தன் ரெட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசுவது போன்ற ஆடியோவை அக்கட்சியினர் நேற்று வெளியிட்டனர். ராய்ச்சூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பசனகவுடாவிடம் ஜனார்த்தன் ரெட்டி பேசியிருக்கிறார்.

அந்த ஆடியோவில்,  ``பா.ஜ.க-வுக்கு வருவதாக நீங்கள் ஒத்துக்கொண்டால் நூறு மடங்கு வளர்ச்சி இருக்கும். உங்களைப் பா.ஜ.க தேசியத் தலைவரிடம் அறிமுகப்படுத்துகிறேன். நீங்களே அவரிடம் தனியாகப் பேசலாம். அமைச்சர் பதவி வேண்டுமா கேளுங்கள். எந்த அளவுக்கு பணம் வேண்டுமோ அதையும் கேளுங்கள். அதைத் தர நாங்கள் தயார்" எனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும், இவ்விவகாரம் கர்நாடக அரசியல் களத்தை மேலும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க