வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (19/05/2018)

கடைசி தொடர்பு:11:56 (19/05/2018)

கே.ஜி.போபையா தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு..! காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

கர்நாடகாவின் தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்துக்கு எதிராகக் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்

கர்நாடகாவில் நடைபெற்று வரும் முதல்வருக்கான போட்டியில் பல சிக்கல்கள் எழுந்ததை அடுத்து இன்று பா.ஜ.க சார்ப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது. மேலும், கர்நாடக சட்டசபைக்குத் தற்காலிக சபாநாயகரை நியமித்து மே 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பதவியேற்க வேண்டும் என்றும் மாலை  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீதிபதி அர்ஜூன் குமார் சிக்ரி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று மாலையே கர்நாடக சட்டசபைக்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை நியமித்து அம்மாநில ஆளுநர் வஜுபாய் லாலா உத்தரவிட்டார். தற்காலிக சபாநாயகர் நியமனத்துக்கு காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் பெரும் அதிருப்தி தெரிவித்தன. இதையடுத்து போபையா கடந்த 2009-ம் ஆண்டு சபாநாயகராக இருந்தபோது ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு எடியூரப்பா ஆட்சியமைக்க உதவினார். அதற்கு உச்ச நீதிமன்றமும் கண்டம் தெரிவித்திருந்தது எனக் கூறி அவரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணையை இன்று அவசர வழக்காக எடுத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கு நீதிபதி பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி, ராம் ஜெத்மலானி ஆகியோர் ஆஜராகினர். 

அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘போபையா போதிய அனுபவம் இல்லாதவர். அவரை முன்னரே உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. அவரைச் சபாநாயகராக நியமித்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக நடைபெறாது. எனவே, அவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது’ என வாதிட்டார். பிறகு பேசிய நீதிபதி, ‘மூத்த எம்.எல்.ஏ-க்கள் நிறைய பேர் இருக்கும்போது ஆளுநர் ஏன் போபையாவை நியமித்தார்? நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க காங்கிரஸுக்கு சம்மதமா எனக் கேள்வி எழுப்பினார். நீதிபதியின் கேள்விக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. 

தொடர்ந்து பேசிய நீதிபதி, `ஆளுநர் ஒரு குறிப்பிட்ட நபரை நியமிக்கக் கூடாது என கூறும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக நடைபெற நேரடி ஒளிபரப்பே சிறந்த வழி. எனவே, அனைத்து ஊடகங்களும் வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்பலாம். தற்காலிக சபாநாயகராக போபையாவே நீடிப்பார் எனக் கூறி  இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து' உத்தரவிட்டார்.