`பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை!’ -  நிதி அமைச்சகம் 

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளை தற்போது குறைக்க வாய்ப்பில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல்

பல்வேறு காரணங்களால், பன்னாட்டுச் சந்தையில்  கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேசெல்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டின் அன்னியச் செலாவணியில் பெரும்பகுதி, கச்சா எண்ணெய் இறக்குமதிக்குச் செலவிடப்படுகிறது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்தவுடன் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. 20 நாள்கள் விலையை ஈடுசெய்யும் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல்மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அதிகமாக உள்ளன. எனவே, இதன்மீதான வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் 1 பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலரை எட்டியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 25-50 பில்லியன் டாலர் வரை உயர வய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி மொத்தச் செலவீனம் 130 155 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுகுறித்து மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் கார்க் கூறுகையில், `சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருகிறது. அதேசமயம், அன்னியச் செலவாணியில் பெரும்பகுதி கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவிப்படுவதால், இது வர்த்தகப் பற்றாக்குறைமீது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான வரிகள் தற்போதைக்கு குறைக்கப்பட வாய்ப்பில்லை. கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை உயர்வு,  பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறது என்று தெரிவித்தார். கடந்த நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி மொத்தச் செலவு 109.11 பில்லியன் டாலராக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டைவிட 24 சதவிகிதம் அதிகமாகும். இதே நிதியாண்டில் பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி, அதற்கு முந்தைய ஆண்டு அளவுக்குத்தான் இருந்தது. கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி நிகர செலவு 70 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!