நாட்டின் பெருமையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதா? - சமூக வலைதளங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

'பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கத்துவா சிறுமியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என டெல்லி உயர் நீதிமன்றம், கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

உயர் நீதிமன்றம்

காஷ்மீரில், கத்துவா என்ற பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது, பொதுமக்கள் மற்றும் பெண்கள் அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள், குடும்ப விவரங்களை சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் வெளியிடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. 

எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி ஷங்கர் அடங்கிய அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதில், `இந்தியாவுக்கு என்று ஒரு பெருமை உண்டு. அதைச் சீர்குலைக்கும் விதமாகச் செயல்படுவது சரியல்ல. பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது மட்டுமல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியானது. இது தவறு. இதற்கு அனுமதியும் கிடையாது. எனவே, புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டபோதும், புகைப்படங்கள் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!