‘ஜனநாயம் வென்றுள்ளது’ - எடியூரப்பா ராஜினாமாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து, ஜனநாயகம் வென்றுள்ளதாகப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

 இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின், “ உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, “ ஜனநாயகம் வென்றுவிட்டது. கர்நாடகாவுக்கு வாழ்த்துகள். தேவ கவுடா, குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” எனத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ கர்நாடக முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பா பதவி விலகியிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. ஜனநாயகத்தின்மீது நம்பிக்கைகொண்ட அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார். 

கர்நாடக சட்ட சபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸின் மூத்த நிர்வாகி குலாம் நபி ஆசாத், “ பா.ஜ.க-வின் தூண்டுதல்களுக்கு அடிபணியாமல் நின்ற காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏ-க்களுகு வாழ்த்துகள். பல தடைகளைக் கடந்தும் அவர்கள் கட்சியின் கொள்கை மற்றும் கட்சித் தலைமை எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார். 

முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப. சிதம்பரம், “ கர்நாடக சட்டசபைக் கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பியதால், மக்கள் ஒவ்வொருவரும் தற்காலிக சபாநாயகராக இருந்துள்ளனர்; ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது'' என ட்விட்டியுள்ளார்.

கங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ எந்த மாநிலத்திலும் மக்களின் தீர்ப்பை பா.ஜ.க மதிப்பதில்லை. கர்நாடக மக்களுக்கு எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒற்றுமையோடு செயல்பட்டு, எதிர்க்கட்சியினர் பா.ஜ.க-வை வீழ்த்தியது பெருமையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி இதுகுறித்துக் கூறும்போது, “கர்நாடக நிகழ்வு பா.ஜ.க-வுக்கு பெரும் அடியாக இருக்கும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவர்கள் செய்திருந்த திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன. இனி ,பா.ஜ.க புது முயற்சிகளையே கையாள வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!