வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (20/05/2018)

கடைசி தொடர்பு:07:00 (20/05/2018)

`இதுதான் பா.ஜ.க-வின் ஜனநாயகமா?' - கொதிக்கும் ராகுல் காந்தி!

நேற்றைய முன்தினம் கர்நாடகாவின் 23 வது முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க-வுக்கு, பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தபோதே காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகப் பேரவையில் உருக்கமாகப் பேசிய எடியூரப்பா, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

எடியூரப்பாவின் ராஜினாமா குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்த சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “ஜனநாயகத்தைத் தடம் புரளச் செய்யும் பா.ஜ.கவின் திட்டம் தோல்வியடைந்திருக்கிறது. அதோடு, கர்நாடக மக்கள் பா.ஜ.க வின் ஆட்சியை விரும்பியிருந்தால் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் ஆதரவு கொடுத்திருப்பார்கள். மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிரான முடிவை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பிரதமரே நேரடியாக முயற்சி செய்கிறார். இதுதான் பா.ஜ.க-வின் ஜனநாயகமா” எனக் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி பிரதமர் ஊழலை ஒழிப்பதாகக் கூறும் அனைத்தும் பொய்யே என்ற விமர்சனத்தையும் முன் வைத்தார்.