100 கி.மீ வேகத்தில் வீசி காரையே புரட்டிப்போட்ட புழுதிப்புயல்... தப்பிக்குமா வட இந்தியா? | Will north India survive dust storm this year

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (21/05/2018)

கடைசி தொடர்பு:13:11 (21/05/2018)

100 கி.மீ வேகத்தில் வீசி காரையே புரட்டிப்போட்ட புழுதிப்புயல்... தப்பிக்குமா வட இந்தியா?

இதுபோல் வட இந்தியாவின் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஆக்ரா, டெல்லி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட புழுதிப்புயல் 150க்கும் மேற்பட்ட மக்களைக் காவு வாங்கிச் சென்றுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

100 கி.மீ வேகத்தில் வீசி காரையே புரட்டிப்போட்ட புழுதிப்புயல்... தப்பிக்குமா வட இந்தியா?

"நான் கண்ட அனைவருமே மிரண்டுபோயிருந்தனர். மரங்கள், வீடுகள் என்று அனைத்துமே புயற்காற்றால் வீசப்பட்டுக்கொண்டிருக்க, மக்கள் மறைவான பகுதியைத் தேடிச் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர். எனது கார் புயற்காற்றால் தூக்கிவீசப்படுவதற்கு அறிகுறியாக, மேலும் கீழுமாக அசைந்துகொண்டிருந்தது. நான் விரைந்து கதவைத் திறந்து வெளியேறினேன். வெளியேறிய சில நொடிகளில், என் கார் காற்றில் பறந்தது. சாலையோரத்தில் கிடந்த பாறையை இறுகப் பற்றிக்கொண்டு உயிர்பிழைக்கப் போராடினேன்."

ராஜஸ்தானைச் சேர்ந்த ஷிவம் லோஹியா என்ற ஒரு ஹோட்டல் முதலாளி, தான் உயிர்பிழைத்த அனுபவத்தைப் பற்றி விவரித்தார். அவர் கூறியது உண்மைதான். அன்று அனைவருமே மிரண்டுதான் போயிருந்தனர். கடந்த மாதம் 11-ம் தேதி ஏற்பட்ட புழுதிப் புயல், பகல் பொழுதில் வந்ததால் மக்கள் சுதாரித்து தப்பிப்பிழைக்க முடிந்தது. அப்படியிருந்தும் 11பேரை அவர்கள் இழந்தனர். இதுவோ இரவுநேரம். அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கும் சமயம் ஏற்பட்டது. தூக்கத்தில் இருந்தபோதே பலரின்மீது மண்சுவர்கள் இடிந்துவிழுந்தன.

புழுதிப்புயல்

இதுபோல, வட இந்தியாவின் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஆக்ரா, டெல்லி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட புழுதிப்புயல்,             150-க்கும் மேற்பட்ட மக்களைக் காவு வாங்கிச் சென்றுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதற்கும் அதிகமானோர் வீடிழந்து நிற்கின்றனர். இன்னும் சில தினங்களில் ஏற்பட உள்ள மற்றுமொரு புயலைச் சந்திக்க அந்த மக்கள் காத்திருக்கின்றனர். இம்முறை எவ்வளவு வேகத்தோடு வருமோ... இன்னும் எத்தனை இழப்புகளைச் சந்திக்கவேண்டியிருக்குமோ!

'காற்றின் தீவிரம், அடுத்த 2 நாள்களில் ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற பகுதிகளில் மீண்டும் புழுதிப் புயலை உண்டாக்குவது உறுதி' என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

தென்மேற்குப் புயற்காற்று

கோடைக் காலங்களில், இதுபோன்ற புழுதிப் புயல்களும் கடுமையான இடி மின்னல்களுடன்கூடிய மழையும் அந்தப் பகுதிகளில் வாடிக்கையானவைதான். ஆனால், இந்த ஆண்டின் தீவிரம்போல வேறெப்போதும் இருந்ததில்லை என்கிறார், தனியார் வானிலை ஆய்வு மையமான 'ஸ்கைமெட்'டின் துணை- இயக்குநர் மஹேஷ் பஹ்லாவட். மே 2-3 மற்றும் 13-15-ம் தேதிகளில் ஏற்பட்ட புயற்காற்று, மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசியதாகப் பதிவாகியுள்ளது. அடுத்து வரக்கூடிய புயல், இதைவிட வேகமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புழுதிப்புயலுக்குக் காரணம் என்ன?

புழுதிப் புயல்

மேற்கே மத்திய தரைக் கடலில் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாகவே, கோடைக் காலங்களில் வடமேற்கு மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில், அங்கு ஏற்படும் அதீத மாற்றங்களின் தாக்கத்தினால், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. மேற்கு இந்தியப் பகுதிகளும், பாகிஸ்தானும் அதீத வெப்பத்தை உணரும் பகுதிகள். மத்திய தரைக் கடலிலிருந்து காற்றில் ஈரப்பதத்தைக் கொண்டுவரும் மேகங்கள், இங்கே இருக்கும் வெப்பத்தால் ஏற்படும் சூறாவளிக் காற்றோடு சேர்ந்து இத்தகைய நிகழ்வுகளை  உண்டாக்கிச் செல்லும். அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இத்தகைய நிகழ்வுகள் இமயமலையின் மேற்குப் பகுதிகளிலும் வடஇந்தியாவின் சமவெளிகளிலும் சாதாரணமாக நிகழும். ஆனால் ஏப்ரல், மே மாதங்களில் நிகழ்வதுதான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கான விடை கிடைக்காதது மட்டுமின்றி, வருடா வருடம் மேற்கு இமயமலை மற்றும் வடஇந்தியப் பகுதிகளில் ஏன் ஒவ்வொரு வருடமும்  இது நிகழ்கிறது என்பது விடையற்ற வினாவாகவே இருந்தது. இதற்குக் காரணம், தொடர்ச்சியாக நடைபெறும் பருவநிலை மாற்றமே என்று சமீபத்தில் தெரியவந்தது.

பருவத்தில் ஏன் இத்தனை மாற்றங்கள்?

இனிவரும் காலங்களில், அதிகமான மற்றும் அதி தீவிரமான புழுதிப் புயல்களையும் சூறாவளிகளையும் நாம் சந்திக்கவேண்டிவரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு மூலகாரணம், புவி வெப்பமயமாதல். புவியின் வெப்பம் அதிகமாவதால், மண் மிகவும் வறண்டு, காற்றால் தூக்கிச் செல்லப்படுவதற்குத் தோதாகிவிடும். ஆகையால், அதிகமான புழுதியை நீண்ட தூரத்திற்கு காற்று சுழற்றியடிக்கும். பருவநிலை மாற்றம், வானிலையின் செயல்பாடுகளைப் பல்வேறு வகையில் மாற்றமடையச் செய்வதால், அதன் விளைவுகளும் இவற்றோடு கலந்து விளைவுகளை மேலும் வீரியமடையச் செய்யும்.

பேரிடர்கள்

இந்த ஆண்டு கோடை மழை, 2015-ம் ஆண்டை விட மிகக் குறைவாகவும், 2016-17-ம் ஆண்டுகளைவிடக் கொஞ்சம் குறைவாகவும் இருக்கிறது. அது மட்டுமின்றி, கோடையின் அதிக வெப்பத்தால் நிலங்கள் வறண்டு, அளவுக்கு அதிகமான புழுதிகளை உருவாக்கியது. வழக்கமான கோடைக்கால தென்மேற்குப் புழுதிப் புயலுக்கு இது தூபம் போடுவதாக அமைந்தது. 

அதீத வெப்பத்தைக்கொண்ட மாநிலங்களில் ஏற்படும் வெப்ப அலைகள் வளிமண்டலத்தைப் பலவீனமாக்குவதே, புழுதிப் புயலுக்கும் எளிதில் கடுமையான இடி மின்னல்களை உருவாக்குவதற்கும் ஏதுவான சூழலை உருவாக்கிவிடுகிறது.

புவி வெப்பமயமாதல் மற்றும் இந்தியப் பருவநிலையில் அதன் தாக்கம் ஆகியவற்றின் மற்றுமொரு அடையாளம்தான் இதுவா? என்ற கேள்வி எழுகிறது.

காடழிப்பு, இயற்கைக் காடுகளின் தன்மையை மாற்றியமைத்தல், அதீத நகரமயமாக்கல் ஆகியவை வெப்பமயமாதலின் ஆபத்தான விளைவுகளை மேன்மேலும் அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறதா இந்த இயற்கைப் பேரிடர்கள்?


டிரெண்டிங் @ விகடன்