வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (21/05/2018)

கடைசி தொடர்பு:17:06 (21/05/2018)

டிரைவர் வேலைக்குப் போட்டியிடும் எம்.பி.ஏ-க்கள், இன்ஜினீயர்கள்... குஜராத் நிஜ நிலவரம்!

நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில்தான் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் மிகக்குறைந்த அளவில், அதாவது 0.9 சதவிகிதம் இருப்பதாக மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தேசிய வேலைவாய்ப்புத் தகவல் மையத்தின் தகவல் தெரிவிக்கிறது.

திக வேலைவாய்ப்பை உருவாக்கிய மாநிலமாக, மத்திய அரசு குஜராத்தைக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் நிஜ நிலவரமோ, டிரைவர் வேலைக்கு எம்.பி.ஏ., எல்.எல்.பி மற்றும் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் போட்டிபோடுகின்றனர்!

குஜராத்

அண்மையில் குஜராத் உயர் நீதிமன்றம், அதன் அதிகாரத்துக்குட்பட்டு செயல்படும் வெவ்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள 24 டிரைவர் பதவிகளுக்கு விண்ணப்பம்கோரி விளம்பரம் வெளியிட்டிருந்தது. இதற்கு 10,300 விண்ணப்பங்கள் வந்தன. `கல்வித் தகுதி, 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்' என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த  நிலையில், விண்ணப்பித்தவர்களில் 55 சதவிகிதம் பேர் இளநிலை பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள்.

மேலும் எம்.பி.ஏ., எம்.எஸ்ஸி., எம்.டெக், எல்.எல்.பி மற்றும் இன்ஜினீயரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவில் முதன்முறையாக டிரைவர் பதவிக்கு 7 பெண்களும் விண்ணப்பித்திருந்தனர்.

வந்த விண்ணப்பங்களில் 488 பேர் எம்.ஏ படித்துள்ளனர். எம்.காம் 101, எம்.எஸ்ஸி 20, எல்.எல்.பி 34, 94 பேர் எம்.இ., எம்.டெக் உள்ளிட்ட அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள். அதிகபட்சமாக 2,900 பேர் பி.ஏ. பட்டதாரிகள். மேலும் பி.காம் 802, பி.எஸ்ஸி 92, டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்தவர்கள் 366 பேரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அது மட்டுமின்றி பி.இ, பி.டெக் மற்றும் பி.சி.ஏ பட்டதாரிகளும் கணிசமானோர் உள்ளனர்.

விண்ணப்பித்தவர்களில் இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பட்டதாரிகளின் மொத்த எண்ணிக்கை 5,400 என்றும், `இது மொத்த விண்ணப்பதாரர்களில் 55 சதவிகிதம் பேர்' என்றும் அந்த மாநிலத்திலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் உயர் நீதிமன்றம்

இது தொடர்பாக அந்த நாளிதழ் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கேட்டபோது, அவர் இந்த எண்ணிக்கையை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை. ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாம் எதுவும் கூற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில்தான் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் மிகக்குறைந்த அளவில், அதாவது 0.9 சதவிகிதம் இருப்பதாக மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தேசிய வேலைவாய்ப்பு தகவல் மையத்தின் தகவல் தெரிவிக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளோ, குஜராத்தில் 4.95 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவுசெய்துள்ள நிலையில், அந்த மாநில அரசோ கடந்த இரண்டு ஆண்டுகளில் 12,689 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பை அளித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

"இன்றைய நிலையில் இன்ஜினீயர்கள் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரிகள்கூட 20,000 ரூபாய்க்கும் குறைவான ஊதியமே பெறுகின்றனர். எனவேதான், டிரைவர் வேலை என்றாலும் இத்தனை பட்டதாரிகள் போட்டிபோட்டு விண்ணப்பித்துள்ளனர்.

குஜராத்

இந்த டிரைவர் பணிக்கான சம்பள விகிதம் ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ளாஸ் 4 பிரிவின் கீழ்வரும் இதுபோன்ற உதவியாளர் அல்லது டிரைவர் பதவிக்கான தொடக்கநிலை ஊதியம் 25,000 ரூபாய் மற்றும் இதர சலுகைகளுடன்கூடியது என்பதால், அவர்கள் பெறும் மொத்தச் சம்பளத்தொகை 25,000 ரூபாயைத் தாண்டும். மேலும், அரசு வேலை என்பதால் பணிப் பாதுகாப்பும், சமூக அந்தஸ்தும் கிடைக்கும். எனவேதான் எம்.பி.ஏ பட்டதாரிகள்கூட இந்த வேலைக்குப் போட்டிபோடுகிறார்கள்'' என்கிறார் குஜராத் உயர் நீதிமன்றப் பணியாளர் ஒருவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்