வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (21/05/2018)

கடைசி தொடர்பு:18:31 (21/05/2018)

நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மையை இழந்ததா பி.ஜே.பி.?

ர்நாடக சட்டசபைத் தேர்தல் களேபரங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பி.ஜே.பி. உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையைவிடவும் குறையும் சூழல் உருவாகியுள்ளது.

மோடி - பி ஜே பி

நாடாளுமன்றத்துக்கு அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியும் இப்போதே, நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, பல்வேறு மாநிலங்களிலும் காய் நகர்த்தல்களைத் தொடங்கியுள்ளது. 
இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்லில் அதிகபட்சமாக 104 இடங்களில் வெற்றிபெற்ற பி.ஜே.பி-யை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் ஒரே நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முதல்வராகப் பொறுப்பேற்ற பி.எஸ். எடியூரப்பா மூன்றே நாளில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

எடியூரப்பா - பி.ஜே.பி.பி.ஜே.பி. மூத்தத் தலைவரான எடியூரப்பா, சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதால், அவர் ஏற்கெனவே வகித்த எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல், மற்றொரு பி.ஜே.பி. மக்களவை உறுப்பினராக இருந்த ஶ்ரீராமுலுவும் சட்டசபைக்குத் தேர்வானதால், தன்னுடைய எம்.பி. பதவியிலிருந்து விலகினார். கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ-க்களாகப் பதவியேற்பதற்கு முன்னர், அவர்கள் இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இதனால் மக்களவையில் பி.ஜே.பி.-யின் தற்போதைய எண்ணிக்கை 272 ஆகக் குறைந்துள்ளது. மக்களவைத் தலைவரைச் சேர்த்தால் 273. 

எடியூரப்பாவும், ஶ்ரீராமுலுவும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததை பெங்களூரில் பி.ஜே.பி-யின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் சாந்தா ராம் உறுதிப்படுத்தினார். மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு அவர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை அளித்ததாக அவர் குறிப்பிட்டார். கர்நாடக மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஷிவமோகா தொகுதியிலிருந்து எடியூரப்பாவும், பெல்லாரி (தனி) தொகுதியிலிருந்து ஶ்ரீராமுலுவும் 2014- ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

மக்களவையில் பி.ஜே.பி. உறுப்பினர்களின் பலம் (மக்களவைத் தலைவர் தவிர்த்து) 273 என்றாலும், ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாலும், மற்றொரு எம்.பி.யான சத்ருகன் சின்ஹா கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருப்பதாலும், அவைத் தலைவரையும் சேர்த்து, பி.ஜே.பி-க்கு 271 உறுப்பினர்களே உள்ளனர். இது மக்களவையில் பெரும்பான்மை எண்ணிக்கையைவிடவும் ஓர் உறுப்பினர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

2014- ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த கட்சி என்ற பெருமையை பி.ஜே.பி. பெற்றபோதிலும், அக்கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த நான்காண்டுகளில் 10 பேர் வரை குறைந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தனிப்பெரும் கட்சியாக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது பி.ஜே.பி. தற்போது பி.ஜே.பி-க்கு 272 உறுப்பினர்கள் (அவைத்தலைவர் தவிர்த்து) இருந்தபோதிலும், கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேர் அதிருப்தி உறுப்பினர்களாக உள்ளனர். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கீர்த்தி ஆசாத்தை கட்சியிலிருந்து பி.ஜே.பி. சஸ்பெண்ட் செய்துள்ளது. மற்றோர் அதிருப்தி உறுப்பினரான சத்ருகன் சின்ஹா, தொடர்ந்து கட்சிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். மேலும் கட்சியிலிருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். எனவே, பெரும்பான்மை வாக்கெடுப்பு என்று வந்தால், இவர்கள் இருவரும் வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

நாடாளுமன்ற மக்களவையில் மொத்த இடங்கள் 543.

நாடாளுமன்றம்

பி.ஜே.பி. 272 (2 பேர் அதிருப்தி உறுப்பினர்கள்)

இந்திய தேசிய காங்கிரஸ் 48 

அ.தி.மு.க.  37

திருணாமூல் காங்கிரஸ் 34 

பிஜு ஜனதா தளம் 20 

சிவசேனா 18.

தெலுங்குதேசம் 16 

தெலங்கானா ராஷ்டிர சமிதி 11

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்  9

சி.பி.ஐ (எம்) 9

சமாஜ்வாடி கட்சி 7

லோக் ஜனசக்தி 6 

தேசியவாத காங்கிரஸ் கட்சி 6

ராஷ்டிரிய ஜனதா தளம் 4

சிரோமணி அகாலிதளம் 4

ஆம் ஆத்மி 4 

சுயேச்சை மற்றும் இதரக் கட்சிகள் 32.

ஶ்ரீராமுலு - பி.ஜே.பி.நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரின்போது, பி.ஜே.பி. அரசுக்கு எதிராக தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் அதனை ஆதரித்தன. ஆனால், அரசுக்கு எதிரான தீர்மானத்தை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மறுத்து விட்டார். 

இதுபோன்ற சூழ்நிலையில், மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தால், கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி போன்ற சிறிய கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, ஏற்கெனவே சிவசேனா, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் வெளியேறி விட்ட நிலையில், எம்.பி-க்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவது, பி.ஜே.பி-க்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இப்போதைக்கு மத்திய பி.ஜே.பி. அரசுக்கு ஆபத்து இல்லை என்றாலும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல்வரை அரசு கவிழாமல் நீடிக்குமா என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.

தவிர, கர்நாடகத்தில் கூட்டணி சேர்ந்தது போன்று, இதர மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியுடன் மாநிலக் கட்சிகள், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேரும்பட்சத்தில், பி.ஜே.பி. மீண்டும் வெற்றிபெறும் கனவு பொய்த்துப் போகக்கூடும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்