வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (22/05/2018)

கடைசி தொடர்பு:11:03 (22/05/2018)

உலகின் பணக்கார நாடுகள் பட்டியல் வெளியீடு - டாப் 10-ல் இந்தியா!

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலை, ஏ.எஃப்.ஆர் ஆசியா வங்கி வெளியிட்டுள்ளது. 

இந்தியா

ஏ.எஃப்.ஆர் ஆசியா (Afr Asia) வங்கி, சமீபத்தில் உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதில், தனிநபர்களின் பொருளாதாரம் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பை மட்டும் அடிப்படையாகக்கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அரசாங்கங்களின் பொருளாதார வளர்ச்சி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறியிருந்தது. 

இதன் அடிப்படையில், நாடுகளின் சொத்து மதிப்புகள் கணக்கிடப்பட்டு, பணக்கார நாடுகளின் வரிசைப் பட்டியலைத் தயாரித்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, உலகின் பணக்கார நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்குக் காரணம், இந்தியாவின் சிறந்த கல்வி முறை, உறுதியான மென்பொருள் துறை வளர்ச்சி, பி.பி.ஓ , கே.பி.ஓ சேவைகள், மருத்துவம் மற்றும் ஊடகத் துறை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிதான் என அறிக்கையின்மூலம் தெரியவந்துள்ளது. 

மேலும், இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இதன், சொத்து மதிப்பு சுமார் 62,58,400 கோடி டாலராகும். அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா மற்றும் ஜப்பான் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளைத் தொடர்ந்து, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சொத்து மதிப்பு இருமடங்காக உயரும் என்றும்,   2027-ம் ஆண்டில் ஜெர்மனி மற்றும் பிரிட்டனை விட இந்தியா அதிக சொத்து மதிப்போடு நான்காவது இடத்தில் இருக்கும் எனவும் ஏ.எஃப்.ஆர் ஆசியா வங்கி தெரிவித்துள்ளது.