கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்... தமிழக அரசு அலர்ட்!

நிபா வைரஸ்

கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த கண்டறியப்படாத வைரஸ் பரவலால் இதுவரை 10 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த மர்ம மரணங்கள் கேரளாவை மட்டுமில்லாமல் தமிழகத்தையும் பதறவைத்திருக்கிறது. இறந்தவர்களில் ஒரு செவிலியரும் அடக்கம். 25 பேருக்கும் மேல் இந்நோயின் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த 8 நபர்களில் 3 பேரின் மரணம் நிபா வைரஸால் நிகழ்ந்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த மூன்று மரணங்களுக்கும் நிபா வைரஸ்தான் காரணம் என்று புனே தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரள சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜிவ் சதாநந்தன் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் 'இறப்புகளைத் தடுப்பதற்கும், நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிகளை எடுத்துள்ளது. எனவே, மக்கள் பயப்படத் தேவையில்லை', என்று கூறியுள்ளார். நாம் அறியாத இந்த வைரஸ் பற்றிய சில உண்மைகள் இதோ...

NIV என்றால் என்ன?

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி 'நிபா வைரஸ்' என்பது உயிரினங்களுக்குள் நோய் பரப்பும் வகையில் செயல்படும் ஒரு தொற்றுக்கிருமி. பேரமிக்ஸிவிரிடே என்னும் குடும்பத்தின் கீழ் வரும் வைரஸ் இது. நிபா வைரஸ் ஹென்ட்ரா வைரஸுடன் நெருங்கிய தொடர்புடையது. இது 1998ல் முதன்முதலாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கண்டறியப்பட்டிருக்கிறது. அப்போது இந்தக் கிருமி பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவியது. இந்த வைரஸுக்கு நிபா என்னும் பெயர் வரக்காரணம், `சுங்கை நிபா’  (Sungai Nipah) என்ற இடத்திலிருந்த ஒருவரின் உடலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தப் பெயர் வழங்கப்பட்டது. அப்போது இந்த கிருமி பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவியது. 265 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நோயின் தீவிரம் காரணமாக, இதில் 40% பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால், பன்றி மற்றும் மனிதர்களிடம் இருந்துகூட மற்றவர்களுக்குப் பரவுகிறது.

நிபா

2004ல் வௌவால்களால் கீழே தள்ளப்பட்ட பழங்களைச் சாப்பிட்டவர்களை இந்த வைரஸ் தாக்கியது. வங்காளதேசம் மற்றும் இந்தியாவில் மனிதர்களிடம் இருந்து இந்த நோய் பரவத் தொடங்கியது. நிபா வைரஸுக்கு காற்றில் பரவும் தன்மை இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேரடி தொடர்பு மூலமே பரவுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு முன்பு இந்தியாவில் 2001 மற்றும் 2007-ம் ஆண்டு மேற்கு வங்கத்தை இந்நோய் தாக்கியது. 2001ல் சிலிகுரி என்னும் இடத்தில், இந்நோயினால் தாக்கப்பட்ட 66 பேரில் 45 பேர் உயிரிழந்தனர். 2007ல் நாடியா என்னும் இடத்திலுள்ள 5 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கேரளாவை இந்நோய் தாக்குவது இதுவே முதல்முறை. இந்நிலையில், அண்டை மாநிலமான தமிழ்நாடு விழித்துக்கொள்ள வேண்டிய அவசரம் அதிகரித்திருக்கிறது. கேரள எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்புகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை கவனம் திருப்ப வேண்டும்.

'நிபா' அறிகுறிகள்:

தலைவலி, காய்ச்சல், குமட்டல், தலைச்சுற்று, சோர்வு, மனக்குழப்பம் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள். ஆரம்ப நிலையில் மூச்சுத் திணறலும் ஏற்படும். இந்த அறிகுறிகள் 7-10 நாள்கள் வரை நீடிக்கும்.

தடுப்பு மற்றும் சிகிச்சை:

இதுவரை மனிதனையோ இல்லை விலங்குகளையோ குறிப்பிட்ட இந்த நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்கு பிரத்யேக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸ் தாக்குதலுக்கான தீவிர சிகிச்சை மற்றும் மனதேற்றலின் மூலமே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்படுகிறார்கள். இந்நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகமூடி, கையுறை போன்ற முன்னெச்சரிக்கை உபகரணங்களை உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!