எந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா? #VikatanInfographics

வாஜ்பாய் காலத்து பா,ஜ,க-வின் கனவு வாக்கியம் '' இந்தியா ஒளிர்கிறது''. ஆனால், மோடி காலத்து கனவு வாக்கியமோ '' காங்கிரஸ் இல்லா இந்தியா'' என்று மாறிப்போயுள்ளது என்பதுதான் இன்றைய சூழலாக உள்ளது. இதற்கு பா.ஜ.க மிகக் கடுமையாக உழைத்து வருகிறது.

எந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா? #VikatanInfographics

வாஜ்பாய் காலத்து பி.ஜே.பி-யின் கனவு வாக்கியம் 'இந்தியா ஒளிர்கிறது'. ஆனால், மோடி காலத்து கனவு வாக்கியமோ 'காங்கிரஸ் இல்லா இந்தியா' என்று மாறிப்போயுள்ளது என்பதுதான் இன்றையச் சூழலாக உள்ளது. இதற்கு பி.ஜே.பி., மிகக் கடுமையாக உழைத்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல்கள் அவசியமானவை. தேர்தல்களை மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கான நிகழ்வாகப் பார்க்கும்போது, பி.ஜே.பி. தனது ஆட்சிப் பரப்பை இந்தியா முழுவதும் உருவாக்க நினைக்கிறது. 2014-ம் ஆண்டுக்கு முன் 7 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பி.ஜே.பி., இன்று 20 மாநிலங்களில் இருக்கிறது. இதற்கு பி.ஜே.பி. பல யுக்திகளைக் கையாளுகிறது. 

இந்தியாவில் மொத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்றங்களில் 14 மாநிலங்களில் பி.ஜே.பி. பெரும்பான்மை பெற்றிருக்கிறது; 6 மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகளுடன் இணைந்த கூட்டணியில் ஆளுங்கட்சியாகப் பி.ஜே.பி. இருக்கிறது. ஆக, 20 மாநிலங்கள் தற்போது பி.ஜே.பி-யின் கட்சியின் ஆட்சியில் இருக்கின்றன. இவை ஒருபுறம் இருக்க, அந்தக் கட்சிக்கு மாற்றாகக் கருதப்படும் காங்கிரஸ், 3 மாநிலங்களில் மட்டுமே பெரும்பான்மை பெற்று ஆட்சி செய்துவருகிறது. தற்போது நடந்துமுடிந்த இழுபறிகளுக்குப் பிறகு, கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியில் ஒரு மாநிலத்தைக் கைவசம் வைத்திருக்கிறது காங்கிரஸ். தேசியக் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கேரளாவில் ஆட்சியில் உள்ளது. 6 மாநிலங்களில் பி.ஜே.பி., காங்கிரஸ்  அல்லாத மாநிலக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. 

மேகாலயாவில் வெறும் இரண்டு இடங்களை வென்று, பெரும்பான்மையாக 21 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. மேகாலயாவில் செய்ததற்கு நேர்மாறாக, 104 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வராக அமர வைத்தது. இதே ஃபார்முலா மூலம் கோவாவிலும், மணிப்பூரிலும் பி.ஜே.பி. எளிதாக ஆட்சிக்கு வந்தது. ஆனால், இந்த ஃபார்முலாதான் கர்நாடகாவில் பி.ஜே.பி-யிக்கு எதிராகத் திரும்பியது. 

அருணாச்சல பிரதேசத்தில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகள் 42; பி.ஜே.பி. அதே தேர்தலில் 11 தொகுதிகளில் வென்றது. சில மாதங்களில், அந்த மாநில காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த கோஷ்டிப்பூசல் காரணமாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி கலைக்கப்பட்டவுடன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஜே.பி-யுடன் இணைந்தனர். தற்போது 48 சட்டமன்ற உறுப்பினர்களுடனும் இரண்டு சுயேச்சைகளின் ஆதரவுடனும் அருணாச்சல பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சி நடைபெற்று வருகிறது. 

பி.ஜே.பி. இந்த யுக்தியைக் கையாளும் இடங்களில் எல்லாம் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஆளுநர்கள் பெரும்பாலும் பி.ஜே.பி-யைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவில் 31 மாநிலங்களில் 21 மாநில ஆளுநர்கள் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள். மத்தியில் ஆட்சியில்  இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக நியமனம் செய்யப்படுவது இயல்பு. ஆனால், தற்போது ஆளுநர்களாக செயல்பட்டு வரும் பி.ஜே.பி-யினர் தங்கள் பதவிக்குக் கட்டுப்படாதவர்களாகவும், கட்சித் தலைமையின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாகவும் மட்டுமே இருக்கின்றனர். 

இதற்கு ஆகச் சிறந்த உதாரணங்களாக கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, தமிழ்நாட்டில் வித்யாசாகர் ராவ், பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரியில் கிரண் பேடி என பி.ஜே.பி-யின் குட் லிஸ்ட் ஆளுநர்கள் கையில்தான் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாடு இருக்கிறது. 
உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியமைக்க முடிந்தது. அதே சமயம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானத்தை முன்னாள் பி.ஜே.பி. தலைவரும், இன்றைய துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கைய நாயுடு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. 

ஆட்சி, ஆளுநர், குடியரசுத் தலைவர் என அனைத்தையும் பி.ஜே.பி. தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் இந்தியா பி.ஜே.பி. மயமாதலின் யுக்தி என்கின்றனர் எதிர்க்கட்சியினர். மோடி எந்த ஊர் தேர்தலுக்குச் சென்றாலும் ஒரு கதை சொல்கிறார். குஜராத்தில் அழுகிறார். கோவாவில் எமோஷனல் ஆகிறார். வட கிழக்குப் பகுதியை வாஸ்துவுடன் ஒப்பிடுகிறார். இப்படி ஒவ்வோர் ஊருக்கும் ஒரு கதை வைத்துள்ள மோடி, தமிழகத்திலும் கதை சொல்லிப் பார்க்கிறார்.ஆனால், மக்கள் யாரும் அவர் கதையைக் கேட்பதாய் இல்லை. 

கர்நாடகா, ``வேண்டாம்'' என்றது. கேரளா, ''போ மோனே மோடி'' என்றது. ஆந்திராவும், தெலங்கானாவும் விலகிக்கொண்டன. தமிழ்நாடு #GoBackModi என்று முழங்கியது. பெரும்பான்மையை உடைப்பது, எதிர்க்கட்சி வேட்பாளர்களைக் கட்சியில் இணைப்பது, இரண்டு சீட் வென்றாலும் ஆட்சியமைப்பது... இப்படி யுக்திகள் இந்தியா முழுக்கச் சாத்தியமாகலாம். ’காங்கிரஸ் இல்லாத இந்தியா’ பி.ஜே.பி-க்குக் கனவாக இருக்கலாம்; ஆனால், தெற்கில் பி.ஜே.பி. என்பதே வெறும் கனவுதான் என்று அழுத்திச் சொல்லியிருக்கிறது கர்நாடகத் தேர்தல்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!