``அம்மா, நைட் டூட்டிக்குப் போயிருக்காங்க!'' - `நிபா’வால் இறந்த செவிலியர் லினியின் குழந்தைகள்

என்ன ஏதுவென்று தெரியாமலேயே மூவரும் அடுத்தடுத்து பலியானார்கள். இவர்களைத் தாக்கியது என்ன நோய்? நோயின் பின்னணி ஏதும் அறியாமலேயே  இவர்களுக்கு செவிலியர் லினியும் மருத்துவச் சேவை செய்தார். நிபா வைரஸ் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் உயிர்க்கொல்லி நோய். அடுத்த நாளே நிபா வைரஸ் லினியையும் தாக்கியது.

``அம்மா, நைட் டூட்டிக்குப் போயிருக்காங்க!'' -  `நிபா’வால் இறந்த செவிலியர் லினியின் குழந்தைகள்

செவிலியர்கள், தன்னலமற்று சேவைபுரிபவர்கள். உறவினர்களே செய்யத் தயங்கும் பணிகளை நோயாளிகளுக்காக மேற்கொள்பவர்கள். சம்பளத்துக்காக மட்டுமே சகித்துக்கொண்டு ஒருவர் இத்தகைய காரியங்களைச் செய்துவிட முடியாது. அர்ப்பணிப்பு உணர்வும் தொழில் மீது கொண்ட நேசமும் மட்டுமே செவிலியர்களை இடைவிடாமல் இயங்கவைத்துக்கொண்டிருக்கின்றன.

செவிலியர் பணிதான் சிறுவயது முதலே லினியின் கனவு. லினியின் தந்தை, நாள்பட்ட ஒரு நோயாளி. தந்தையுடன் சிறு வயது முதலே மருத்துவமனைக்குச் சென்று பழக்கப்பட்ட லினிக்கு, செவிலியர்கள் அணியும் தூய்மையான வெள்ளை நிறை உடை மீது ஈர்ப்பு. தன் தந்தைக்கும் சில செவிலியர்கள் செய்த சேவை லினியின் மனதை இளகவைத்தது. அப்படித்தான் செவிலியர் தொழில் மீது லினிக்குப் பற்று வந்தது.

செவிலியர் லினி

முறையான செவிலியர் படிப்பைப் படிக்க ஆசைப்பட்டார். பெங்களூருவில் உள்ள பவான் நர்ஸிங் கல்லூரியில் பி.எஸ்ஸி நர்ஸிங் படித்தார். படிப்பதற்கும் கல்விக்கடன்தான் உதவியது. மூன்று வருடப் படிப்புக்குப் பிறகு லினியின் வேலை தேடும் படலம் தொடங்கியது. என்னதான் தன்னலமற்ற சேவை என்றாலும் செவிலியர்களுக்கு சொற்ப சம்பளம்தானே! லினியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. லினியின் சொந்த வாழ்க்கை சொற்பமான சம்பளத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. கல்விக்கடனைக்கூட அடைக்க முடியாமல் தடுமாறினார். கல்விக்கடனை ரத்துசெய்யக்கோரி, அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்தப் பலனுமில்லை. 

இதற்கிடையே லினிக்கு திருமணம் முடிந்தது. கணவர் சஜீஷ், பஹரைன் நாட்டில் பணிபுரிந்து வந்தார். திருமணம் முடிந்த பிறகு, பொருளாதாரரீதியாக லினியின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், செவிலியர் தொழிலை அவர் விட்டுவிடவில்லை. இரு மகன்கள் பிறந்தனர். கணவர் சஜீஷ், `பஹரைனிலேயே செவிலியர் வேலை பார்க்கலாம் வந்துவிடு' என்று அழைத்தும் லினி செல்லவில்லை. தாய்நாட்டிலேயே லினியின் மருத்துவசேவைத் தொடர்ந்தது. தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் கோழிக்கோடு அருகே உள்ள பெரம்பாரா மருத்துவமனையில் லினி செவிலியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். தினசரி சம்பளம்தான். 

இந்நிலையில்தான் நிபா வைரஸ் உருவத்தில் லினியின் வாழ்க்கையில் விதி விளையாடியது. பெரம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகமது ஸாலிஹ், முகமது ஸாபித், மரியம் ஆகியோரை நிபா வைரஸ் தாக்கியது. என்ன ஏதுவென்று தெரியாமலேயே மூவரும் அடுத்தடுத்து பலியானார்கள். இவர்களைத் தாக்கியது என்ன நோய்? நோயின் பின்னணி ஏதும் அறியாமலேயே  இவர்களுக்கு செவிலியர் லினியும் மருத்துவச் சேவை செய்தார். நிபா வைரஸ் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் உயிர்க்கொல்லி நோய். அடுத்த நாளே நிபா வைரஸ் லினியையும் தாக்கியது. நிபா வைரஸ் தாக்கினால் 74.5 சதவிகிதம் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. 

நோயாளிகளைக் காப்பாற்ற முயன்ற செவிலியர் லினியின் உயிரையும் நிபா வைரஸ் குடித்தது. மனைவி உயிரிழந்த விஷயம் கணவர் சஜீஷுக்குத் தெரிவிக்கப்பட, பஹரைனில் இருந்து அவர் கதறிக்கொண்டு தாய்நாடு திரும்பினார். ஆனாலும், சஜீஷால் மனைவியின் உடலைப் பார்க்க முடியவில்லை. தன்னலமற்று சேவைபுரிந்த லினியின் உடல் யார் கண்ணிலும் காட்டப்படாமல் வெஸ்ட் ஹில் மயானத்தில் எரியூட்டப்பட்டதுதான் சோகத்திலும் சோகம். 

இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், செவிலியர் லினியின் மகன்களான ஐந்து வயதுடைய ரிதுல், இரண்டு வயதுடைய சித்தார்த் இருவரும் `அம்மா, நைட் டூட்டிக்குப் போயிருக்காங்க' என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். `குழந்தைகள், அம்மா எங்கே எனக் கேட்டால் என்ன பதில் சொல்வேன்?' என்று கண்ணீர் வடிக்கும் சஜீஷைத் தேற்ற, உறவினர்களிடத்தில் வார்த்தைகள் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!