ஐந்து நாள்கள் சரிந்த பின் சிறிது முன்னேற்றம் கண்டது சந்தை  | Share market for the day at close 22052018

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (22/05/2018)

கடைசி தொடர்பு:18:59 (22/05/2018)

ஐந்து நாள்கள் சரிந்த பின் சிறிது முன்னேற்றம் கண்டது சந்தை 

தொடர்ந்து ஐந்து நாள்கள் சரிவினைச் சந்தித்த இந்தியப் பங்குச் சந்தை, சில முக்கியப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தினால் இன்று லாபத்தில் முடிவடைந்தது.

இருப்பினும், சர்வ தேசச் சந்தைகளில் பெரிதான முன்னேற்றம் இல்லாததாலும், குறுகிய காலப் பொருளாதார வளர்ச்சி பற்றிய ஐயம் மிகுந்திருப்பதினாலும், சந்தை இன்று முழுவதுமே ஒரு மந்த கதியிலேயே பயணித்தது.

மும்பைப் பங்குச்சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 35.11 புள்ளிகள் அதாவது 0.1 சதவிகிதம் உயர்ந்து 34,651.24 என முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 20 புள்ளிகள் அதாவது 0.19 சதவிகிதம் லாபத்துடன் 10,536.70-ல் முடிவுற்றது.

டாலருக்கெதிராக இந்திய ரூபாய் சிறிது முன்னேற்றம் கண்டதும், அமெரிக்கா - சீன நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பூசல் பற்றிய கவலை சற்று குறைந்திருப்பதும் பாசிட்டிவ் ஆனா போக்குக்கு வழி வகுத்தாலும், கர்நாடகத் தேர்தலுக்குப் பின் நாட்டில் நிலவும் அரசியல் போக்கு குறித்த கவலையும், பெரிதான வகையில் திருப்தி தராத காலாண்டு அறிக்கைகளும் ஒரு குறிப்பிடத்தக்க உற்சாகம் ஏற்படாத தடையாக இருந்தன எனலாம். 

விலை அதிகரித்த பங்குகள் :

டாக்டர் ரெட்டி'ஸ் லேபரேட்டரிஸ் 6.3%
பஜாஜ் பைனான்ஸியல் சர்வீசஸ் 4.8%
பஜாஜ் ஆட்டோ 3.9%
டாடா மோட்டார்ஸ் 3.75%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 3.7%
கோல் இந்தியா 3.5%
ஹிண்டால்கோ 2.8%
சன் பார்மா 2.1%
மாருதி சுசூகி 1.6%
இன்ஃபோசிஸ் 1%

விலை இறங்கிய பங்குகள் :

இந்தியன் ஆயில் கார்பொரேஷன் 3.5%
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 1.4%
ஏசியன் பெயின்ட்ஸ் 1.3%
ஆக்ஸிஸ் பேங்க் 1.2%
இந்தஸ்இந்த் பேங்க் 1.2%
ஐ.டி.சி. 1.1%
பவர் கிரிட் 1.1%

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1450 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 1177 பங்குகள் விலை குறைந்தும் 142 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றம் இல்லாமலும் முடிந்தன.