கர்நாடகாவில் குமாரசாமி, துணை முதல்வர் மட்டுமே பதவியேற்பு?! | Apart from Deputy CM, 20 ministers in H.D.Kumarasamy led government in Karnataka!

வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (22/05/2018)

கடைசி தொடர்பு:21:18 (22/05/2018)

கர்நாடகாவில் குமாரசாமி, துணை முதல்வர் மட்டுமே பதவியேற்பு?!

குமாரசாமி - காங்கிரஸ் தலைவர்கள்

ர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு அமைவதற்கு முன்னரே, இந்த அரசு நீடிக்குமா என்ற விவாதங்கள் உருவாகத் தொடங்கி விட்டன.

குழந்தை பிறக்கும் முன்னரே, இந்தக் குழந்தை எத்தனை நாள்கள் அல்லது வருடத்திற்கு உயிரோடு இருக்கும் என்று பெற்றோரிடம் பலரும் கேட்பதைப் போன்ற கூற்றுகள் உலவத் தொடங்கியுள்ளன.

பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா ஒருபடி மேலேபோய், எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கர்நாடக மாநில சட்டசபைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் தரப்புக்கு துணை முதல்வர் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்கள் வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கூட்டணி அரசு அமைப்பது குறித்தும், அரசில் இடம்பெறுவோர் பற்றிய விவரங்கள் குறித்தும், குமாரசாமி டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அதிகாரப் பகிர்வு என்பதை விடவும், விரிவான கூட்டணி குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராகுல் - குமாரசாமி - சோனியா காந்தி

கர்நாடகத்தில் துணை முதல்வர் பதவியுடன், சட்டசபை சபாநாயகர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தாலும், கடந்த காலத்தை மறந்து விட்டு, எதிர்காலத்தை நோக்கிய பயணமாக அமையட்டும் என்று ராகுல், சோனியாவுடனான சந்திப்பின்போது குமாரசாமி தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் குமாரசாமி பதவியேற்பு விழாவும், அதைத் தொடர்ந்து சபாநாயகர் தேர்வும், குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகே அமைச்சர்கள் பற்றிய இறுதி முடிவெடுக்கப்படும் என்று காங்கிரஸ் - ஜே.டி. (எஸ்) வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே காங்கிரஸ் - ஜே.டி. (எஸ்) கூட்டணி அரசு தொடர்ந்து நீடிக்காது என்று பரவலாகத் தகவல்கள் வெளியாகி வருவதால் பரபரப்பு அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே கர்நாடகத்தில் உள்ள சூழ்நிலை குறித்து மூத்தத் தலைவர்களுடன் ராகுல் காந்தி விவாதித்து முடிவெடுத்து விட்டதாகவும், காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, காங்கிரஸ் மேலிடத் தலைவர் வேணுகோபால், குமாரசாமியைச் சந்தித்துப் பேசிய பின்னரே அமைச்சர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாளைய பதவியேற்பு விழாவின்போது, அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று தெரிகிறது. 

ஜி.பரமேஸ்வரா - கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தலித் தலைவரான ஜி. பரமேஸ்வரா துணை முதல்வராகப் பொறுப்பேற்கக்கூடும் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. குமாரசாமியுடன் பரமேஸ்வராவும் பதவியேற்க வாய்ப்பிருக்கிறதாகக் கூறப்படுகிறது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், இரண்டாவது துணை முதல்வராகப் பதவியேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் அதுகுறித்து உறுதியாகத் தெரியவரவில்லை. 

காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் உள்பட 20 அல்லது 21 அமைச்சர்கள் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. 38 உறுப்பினர்களைக் கொண்ட ஜே.டி.(எஸ்)-க்கு முதல்வர் குமாரசாமி தவிர 12 அல்லது 13 அமைச்சர்கள் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்கள் எண்ணிக்கையில் காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) இடையே உடன்பாடு ஏற்பட்டு விட்டாலும், முக்கிய இலாகாக்களான உள்துறை, வருவாய், மின்சாரத்துறை, நிதி போன்ற துறைகளை காங்கிரஸ் கட்சி கோருவதாகவும், அந்தத் துறைகளை விட்டுத்தர ஜே.டி (எஸ்) மறுப்பதாகவும் பெங்களுருவில் இருந்து வரும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கூட்டணிக்குள் சிறு பூசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தவிர, தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்.ஆர். நகர், ஜெயநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்க இரு கட்சிகளின் சார்பில் குழு அமைக்கப்படும் என்றும், இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அந்தக் குழு இறுதி யோசனைகளைத் தெரிவிக்கும் என்றும், ஒருங்கிணைப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சித்தராமையா தொடர்ந்து நீடிப்பார் என்றும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கும், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அவரை கர்நாடகத்தில் முக்கியத் தலைவராக முன்னிறுத்தப்படுவார் என்றும் காங்கிரஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அமைச்சரவை உறுப்பினர்களை இறுதி செய்வதில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று தெரிகிறது. குமாரசாமி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான ரமணாகரா உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்தத் தொகுதியில் குமாரசாமியின் மனைவி அனிதா அல்லது மகன் நிகில் போட்டியிடக்கூடும் என்று பரவலாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனவே, குமாரசாமி தலைமையில் அமையவிருக்கும் கூட்டணி அமைச்சரவை தொடர்பாக சிறு சிறு பூசல்கள் இருந்தாலும், அது எந்தவிதத்திலும் கூட்டணிக்கு பாதகமாக அமையாது என நம்பலாம்....

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்