15 வயதில் போராட்டம்... உடன்கட்டை ஏறுதலை ஒழித்துக் கட்டிய சீர்திருத்தவாதி! #RememberingRajaRamMohan

ராஜா ராம் மோகன் ராய் சீர்திருத்தவாதி

புது நெல்ல நான் அவிக்க 

விதி வந்து சேந்ததடி

தாய்ப்பாலு நீ குடிக்க 

தலை எழுத்து இல்லையடி

கள்ளிப்பால நீ குடிச்சு 

கண்ணுறங்கு நல்லபடி

90-களில் கருத்தம்மாவின் இந்தப் பாடலைக் கேட்டு கண்ணீர்விட்டுக் கதறியது தமிழகம். இப்போதும் எங்கோ ஓர் மூலையில் இந்தப் பாடலைக் கேட்கும்போது, மனம் கணத்துத்தான் போகிறது. கணினி புழக்கத்துக்கு வர ஆரம்பித்த காலகட்டத்திலேயே இப்படியான துயரங்களை நாம் சந்தித்திருக்கிறோம் என்றால், அதற்கும் முந்தைய காலங்கள் எவ்வளவு கொடுமையானதாக இருந்திருக்கும்? பெண் சிசுக்கொலை, பெண் கல்வி மறுப்பு, பெண்களுக்கான சொத்து மறுப்பு, விதவைகளின் மறுமணத்துக்கு மறுப்பு என அனைத்திலிருந்தும் பெண் நிராகரிக்கப்பட்டிருந்தாள். அதனினும் உச்சகட்டமாக, கணவன் இறந்தால் அவனது சிதைத்தீயில் உடன்கட்டை ஏறும் நிர்பந்தமும் வழக்கத்தில் இருந்தது.

இப்படி பெண்களுக்கு எதிரான அநீதிகளும் மூடநம்பிக்கைகளும் கோலோச்சிய 1770-ம் காலகட்டம் அது. வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள ராதா நகர் கிராமத்தைச் சேர்ந்த ராம்காந்தோ ராய் - தாரிணி தம்பதிக்கு மகனாக 1772 மே 22-ம் தேதி பிறக்கிறார் ராஜா ராம் மோகன் ராய். தந்தை வைஷ்ணவத்தையும் தாய் சைவத்தின் வழியையும் பின்பற்றி வந்தவர்கள்.

ராம்காந்தோ வைதீக பிராமணர் என்பதால், தன் மகனை பெரும் செலவுசெய்து பாட்னாவுக்கு அனுப்பி கல்வி பயிலவைத்தார். ஆசை மகன் வேதங்களையும் சாஸ்திரங்களையும் உபநிடதங்களையும் கற்றுத் திரும்புவான் என நினைத்திருந்தார். ராஜா ராமோ ஆங்கிலம், பிரெஞ்ச், லத்தீன், ஹீப்ரூ, கிரேக்கம் உள்ளிட்ட பல மொழிகளைத் தன் வசமாக்கியிருந்தார். வேதங்களைக் கற்றிருந்தாலும், சாதி, மதவெறி, தீண்டாமை, சடங்குகள், பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார்.

raja ram mohan roy

அப்போது, ராஜா ராம் மோகன் ராய்க்கு 15 வயது. கிராமத்துக்கு அருகே 20 வயது நிறைந்த பெண் ஒருத்தியின் கணவன் இறந்துபோக, வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணையும் உடன்கட்டை ஏறவைக்கிறார்கள். தன் கண் முன்னே துடிதுடிக்கப் பலியாகும் அந்தப் பெண்ணின் கதறல், அவரின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்தப் பெண்ணின் அலறல், தூங்கவிடாமல் செய்கிறது. தன் தந்தையிடம் சென்று, 'இப்படியொரு சடங்கு தேவைதானா? இது நியாயம்தானா?' எனச் சண்டையிடுகிறார். 'இது நம்முடைய மரபு. நமது சடங்குகளுக்கு எதிராகப் பேசாதே' எனக் கடிந்துகொள்கிறார் தந்தை. இதனால், தந்தையோடு கருத்து வேறுபாடு தோன்றுகிறது. இந்த மூடப்பழக்கங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஆணி வேராக இறங்குகிறது.

அர்த்தமற்ற சடங்குகளையும் கொடிய வழக்கங்களையும் நடைமுறையிலிருந்து நீக்க வேண்டும். அவற்றை அடியோடு ஒழிக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துகிறார். 'பிரம்ம சமாஜ்' எனும் அமைப்பை நிறுவி, அனைத்து மதங்களிலும் உள்ள நல்ல கருத்துகளை பரப்புகிறார். உருவ வழிபாட்டைத் தவிர்ப்பது, பெண் சிசுக்களைக் கொலைக்கு எதிராகப் போராடுவது, குழந்தைத் திருமணங்களை தடுப்பது, வரதட்சணைக்கு எதிராகப் போராடுவது, முக்காடு அணிவதைத் தடுப்பது எனத் தன் அமைப்பின் மூலம் பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகளைக் களைவதில் மும்முரம் காட்டினார்

ராஜா ராம் மோகன் ராயின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட அப்போதைய வைஸ்ராய் வில்லியம் பெண்டிங் பிரபு, உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்கும் சட்டம் இயற்றினார். அதோடு, விதவைகள் மறுமணம் செய்துகொள்ளும் அனுமதியையும் பிறப்பித்தார். இது, ராஜா ராம் மோகன் ராயின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

பெண் சமூகத்தில் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அவரின் பிறந்தநாளில் சில நிமிடங்கள் அவரை மனதில் நிறுத்தி மரியாதை செய்வோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!