போலி பில்கள் மூலம் ரூ.450 கோடி மோசடி... ஜிஎஸ்டி-யில் அரசை ஏமாற்றும் நிறுவனங்கள்! #GST | Rs 450-crore Input Tax Credit: Intelligence unit unearths fake GST bills business

வெளியிடப்பட்ட நேரம்: 09:47 (23/05/2018)

கடைசி தொடர்பு:10:02 (23/05/2018)

போலி பில்கள் மூலம் ரூ.450 கோடி மோசடி... ஜிஎஸ்டி-யில் அரசை ஏமாற்றும் நிறுவனங்கள்! #GST

இந்த வரி மோசடியால் வரி வசூல் பாதிக்கப்படுவதோடு, அதன் பயனும் விற்பனையாளரிடமிருந்து நுகர்வோருக்குச் செல்வதற்குப் பதிலாக ஒரு வர்த்தக நிறுவனத்திடமிருந்து மற்றொரு வர்த்தக நிறுவனத்துக்குச் சென்றுவிடுகிறது. 

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலாகி, இன்னும் ஓராண்டுகூட பூர்த்தியாகாத நிலையில், போலியான பில்கள் மூலம் சுமார் 450 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளீட்டு வரிப் பயனைப் பெற்று மோசடி செய்துள்ளதை, சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். #GST

#GST

கடந்த  ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமலானது. இதில், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் செலுத்திய மாதாந்திர ஜி.எஸ்.டி.ஆர் ரிட்டன்களையும் இறுதி ஜி.எஸ்.டி ரிட்டன்களையும், ஜி.எஸ்.டி கவுன்சலின் தணிக்கைக் குழு தீவிரமாக ஆராய்ந்து, உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit- ITC) பயன்பாட்டை வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும் திரும்ப அளிக்கும். இவ்வாறு அளிக்கப்படும் உள்ளீட்டு வரி வரவை, போலியான பில்களைக் கொடுத்து சில வர்த்தக நிறுவனங்கள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட புலனாய்வில், சுமார் 2,500 கோடி ரூபாய் அளவுக்கான போலி பில்களைக் கொடுத்து, அதில் 18 சதவிகிதம் அதாவது 450 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனங்கள் உள்ளீட்டு வரிப் பயனைப் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

இந்தப் போலி பில்களைக் கொடுத்தவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், போலி பில்களைக் கொடுத்து உள்ளீட்டு வரிப் பயனைப் பெற்ற நிறுவனங்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வரித் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். நேரில் ஆஜராகும்போது சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் கடந்த ஐந்து ஆண்டுகால வரவு-செலவுக் கணக்குகளை ஆய்வுசெய்ய வரித் துறை அதிகாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புச் சட்டம் அனுமதி அளிப்பதால், நிறுவனங்களின் கடந்தகால பில்களையும் தற்போதைய பில்களையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, போலி பில்களைத் தாக்கல் செய்து உள்ளீட்டு வரிப் பயனைப் பெற்று மோசடி செய்த நிறுவனங்கள் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. 

போலி பில்லும் கமிஷனும்

``இதுபோன்ற போலி பில்களைத் தயாரித்துக் கொடுக்கும் நபர்கள், பில் தொகைக்கு ஏற்ற கமிஷன் அடிப்படையில் இவற்றைத் தயாரித்து வழங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். உதாரணமாக, உள்ளீட்டு வரிப் பயனைப் பெறுவதற்காக 118 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளின் பாக்கெட்டுக்கான போலி பில்லை தாக்கல் செய்தால், அதற்கான  உள்ளீட்டு வரி வரவாக 18 ரூபாய் அந்த நிறுவனம் பெறும். இதில் 3 முதல் 5 ரூபாய் வரை போலி பில் கொடுத்தவருக்கு கமிஷனாகக் கொடுத்துவிட்டு, மீதித் தொகையை, சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும்" என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். 

இந்த வரி மோசடியால் வரி வசூல் பாதிக்கப்படுவதோடு, அதன் பயனும் விற்பனையாளரிடமிருந்து நுகர்வோருக்குச் செல்வதற்குப் பதிலாக ஒரு வர்த்தக நிறுவனத்திடமிருந்து மற்றொரு வர்த்தக நிறுவனத்துக்குச் சென்றுவிடுகிறது. 

பொருளுக்குச் செலுத்திய வரியை விதிமுறையின் கீழ் திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு வகையில் மிகப்பெரிய அளவுக்கு வரி ஏய்ப்பு நடப்பதாக அரசு நீண்டகாலமாகவே சந்தேகம்கொண்டிருந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு,  டிசம்பர் 31-ம் தேதி வரை  டிரான்சிஷனல் கிரெடிட் மூலம் 1.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி செலுத்துவோர் க்ளெய்ம் செய்துள்ளனர். இதையடுத்து மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம், அதுபோன்று உரிமை கோரிய விண்ணப்பதாரர்களில் முதல் நிலையில் இருந்த 50,000 பேரைத் தேர்ந்தெடுத்து, அதாவது சுமார் 90 சதவிகித டிரான்சிஷனல் கிரெடிட் பெற்றவர்களிடம் விரிவான விசாரணை நடத்துவதற்காக அவர்களை நேரில் ஆஜராகச் சொல்லி விசாரணை நடத்தத் தொடங்கியது. இந்த விசாரணை, இந்த ஆண்டு  முழுவதும் நடக்கலாம். 

ஜி.எஸ்.டி

இந்த நிலையில்தான், மேற்கூறிய மோசடி விவரம் தெரியவந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உள்ளீட்டு வரி வரவு கிடைக்க முக்கிய முன்நிபந்தனைகள்...

1. விலைப்பட்டியல் (இன்வாய்ஸ்) இருக்க வேண்டும்.

2. சரக்கு /சேவை பெற்றிருக்க வேண்டும்.

3. ஜி.எஸ்.டி வரி செலுத்தியிருக்க வேண்டும்.

4. வரிக்கணக்கு அப்லோடு செய்திருக்க வேண்டும்.

5. விற்பவருக்கு தொகை 180 நாளுக்குள் கொடுத்திருக்க வேண்டும். இல்லாவிடில் உள்ளீட்டு வரி திரும்பப் பெறப்படும் (அவருடைய ஜிஎஸ்டி வரி பதிவேட்டில் கழிக்கப்பட்டுவிடும்). ஆனால், அதன் பிறகு தொகை தரப்பட்டால் மீண்டும் அவருடைய இ-கிரெடிட் பதிவேட்டில் வரவுவைக்கப்படும். 

உள்ளீட்டு வரி வரவு பெற எந்தெந்த ஆவணங்கள் தேவை?

விற்பவர் கொடுத்த வரி இன்வாய்ஸ், ரிவர்ஸ் சார்ஜ் (தலைகீழ்க் கட்டணம்) வழியில் வாங்குபவர், பற்றுக் குறிப்பு (Debit Note), இறக்குமதி செய்தால் அதற்கான நுழைவு ரசீது (Bill of Entry),  திருத்தப்பட்ட விலைப்பட்டியல் (Revised invoice).

எதில் உள்ளீட்டு வரி வரவு எடுக்க முடியாது?

பின்வரும் ஒன்பது விஷயங்களுக்கு உள்ளீட்டு வரி வரவு கிடையாது. 

மோட்டார் வாகனங்கள் (இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம்), உணவு மற்றும் பானங்கள், வெளிப்புற கேட்டரிங், க்ளப் உறுப்பினர், அழகு சிசிச்சை, உடற்பயிற்சி மையம், அசையா சொத்துகளுக்கான பணி ஒப்பந்தம், கலவைத் திட்டம் (composition scheme) - டீலரிடம் வாங்கினால், கார் வாடகை.

உள்ளீட்டு வரி வரம்பில் குறுக்குப் பயன்பாடு (Cross utilisation) உண்டு

* சி.ஜி.எஸ்.டி-யில் உள்ளீட்டு வரியை சி.ஜி.எஸ்.டி வெளியிடுவதற்கும்  (Output) மற்றும் ஐ.ஜி.எஸ்.டி வெளியிடுவதற்கும் பயன்படுத்தலாம். 

* சி.ஜி.எஸ்.டி-ல் உள்ளீட்டு வரியை  ஐ.ஜி.எஸ்.டி-க்குப் பயன்படுத்தலாம். அதற்கடுத்து, சி.ஜி.எஸ்.டி-க்குப் பயன்படுத்தலாம். 

* ஐ.ஜி.எஸ்.டி-யில் உள்ளீட்டு வரியை ஐ.ஜி.எஸ்.டி-க்குச் சரிகட்டலாம். (Set off). அடுத்து, சி.ஜி.எஸ்.டி-க்கும், எஸ்.ஜி.எஸ்.டி.க்கும் சரிகட்டலாம். 

* ஐ.ஜி.எஸ்.டி-யை இரு வழிகளில் சரிகட்டலாம். ஒன்று, சி.ஜி.எஸ்.டி. இன்னொன்று, எஸ்.ஜி.எஸ்.டி / யூ.டி.ஜி.எஸ்.டி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்