உள்நாட்டு விமானக் கட்டணம் அதிகரிப்பு... சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு! | A hike in domestic airfares may affect tourism

வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (24/05/2018)

கடைசி தொடர்பு:12:53 (24/05/2018)

உள்நாட்டு விமானக் கட்டணம் அதிகரிப்பு... சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு!

விமான எரிபொருள் விலை உயர்வால் விமானக்கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு விமானக் கட்டணம் அதிகரிப்பு... சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு!

கோடைக்காலம் என்றாலே நினைவுக்கு வருவது சுற்றுலாதான். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், குடும்பத்தினர் முன்கூட்டியே திட்டமிட்டு ஏதேனும் ஒரு சுற்றுலாத் தலத்துக்குச் சென்று விடுமுறையைக் கொண்டாடி வருவர். இந்நிலையில், விமான எரிபொருளின் விலை உயர்வு காரணமாக விமானக் கட்டணமும் உயர்ந்துகொண்டே வருகிறது. இது, சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விமானத்தில் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. 

விமானப் போக்குவரத்துத் துறையில் சர்வதேச அளவில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விமானக் கட்டணம் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த விமானக் கட்டண உயர்வால் விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது. பொதுவாக, கோடைக்காலத்தில் விமானத்தில் பயணிக்க எளிதில் டிக்கெட் கிடைக்காது. தற்போதோ பெரும்பாலான விமானங்களில் இருக்கைகள் காலியாகவே உள்ளன. குறிப்பாக, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 

விமானம்

இந்த மாத தொடக்கத்திலிருந்து முக்கியமான வழித்தடங்களில் விமானக் கட்டணம் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் விமானத்தில் சுற்றுலா செல்வதை குறைத்துக்கொண்டுள்ளனர். மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் விமான எரிபொருளின் விலை 6.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவும், விடுமுறை காலம் என்பதாலும் விமானக் கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. 

இந்த மாதத்தில் டெல்லியில் மட்டும் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை 26.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் விமானங்களை இயக்குவதற்கான மொத்தச் செலவில், விமான எரிபொருளின் பங்களிப்பு 50 சதவிகிதமாக உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் மீது அதிகளவில் வரி விதிப்பதால் விமான நிறுவனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

சர்வதே அளவில் இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. தற்போதைய கட்டண உயர்வால், இந்த வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத் துறையிலும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ``இந்தத் துறையில் கடுமையான போட்டி நிலவுவதால், விமான எரிபொருள் உயர்வை பயணிகள் மீது முழுவதுமாகத் திணிக்க முடியாத சூழல் உள்ளது'' என்று இந்தத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

``பயணத் தேதியிலிருந்து ஒரு வாரத்துக்கு முன்பாக முன்பதிவு செய்யப்படும் விமானக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், இந்த மாதம் 15-ம் தேதி வரையிலான காலத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது'' என்று இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கட்டண உயர்வு, இந்திய விமான நிறுவனங்களின் லாபத்தைக் கடுமையாகப் பாதிக்கும். 

சுற்றுலா

ஜூன் மாதம் வரை விமானக் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளன. அதேசமயம், வெளியூர்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும் கட்டணம், சராசரி அளவைவிட அதிகமாகத்தான் இருக்கும். ``தற்போதைய நிலவரப்படி, 2018-19-ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் விமானக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை. விமான நிறுவனங்கள், தொடர்ந்து விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக அந்தச் சமயத்தில் விமான நிறுவனங்கள் அதிகளவில் கட்டணச் சலுகைகள் வழங்க வாய்ப்புள்ளது. அதேசமயம், விமான நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படுவதால், லாப வரம்பு நிச்சயமாக பாதிக்கப்படும்'' என்று இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 

வரும் ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்கள் கூடுதலாக 900 விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இண்டிகோ நிறுவனம் கூடுதலாக 40 விமானங்களையும், ஸ்பைஸ் ஜெட் ஜூலை மாதத்தில் கூடுதல் விமானங்களையும் இயக்கத் திட்டமிட்டுள்ளது. 

சுற்றுலா சீஸன், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஏப்ரலில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 26 சதவிகிதம் அதிகரித்து, 1.15 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், கடந்த மாதம் இந்திய விமான நிறுவனங்கள் 24.1 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளன. ஏப்ரலில் இண்டிகோ விமானங்களில் 46 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஸ்பைஸ் ஜெட்டில் அதிகளவில் பயணம் செய்துள்ளனர். 

சுற்றுலா செல்ல முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கென்று பணத்தைச் சேமித்துவைத்துச் செலவிடுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், இந்த விமானக் கட்டண உயர்வால் அவர்கள் விமான டிக்கெட்டுக்கு கூடுதலாகச் செலவிடவேண்டியுள்ளது. இது, அவர்களின் திட்டமிட்ட பட்ஜெட்டில் பாதிக்கும் என்பதால், கோடைச் சுற்றுலா செல்லும் திட்டத்தையே அவர்கள் கைவிட்டுள்ளனர். இதனால், சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கியத் துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்று. இதன் வளர்ச்சி பாதிப்பால், அந்நியச் செலாவணியிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


டிரெண்டிங் @ விகடன்