வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (24/05/2018)

கடைசி தொடர்பு:17:10 (24/05/2018)

திருப்பதி கோவிலின் 500 கோடி ரூபாய் நகைகள் மாயமா?- அர்ச்சகர் புகார்

ஆந்திரப்பிரதேசத் திட்ட வாரிய துணைத் தலைவர் குதும்ப ராவ், ``திருப்பதி கோயிலுக்கு அமித் ஷா அண்மையில் வந்தார். அவர் கொடுத்த மாஸ்டர் ப்ளான்படியே தற்போது ரமணா செயல்பட்டு அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்’’ என்றார்.

திருப்பதி கோவிலின் 500 கோடி ரூபாய் நகைகள் மாயமா?- அர்ச்சகர் புகார்

திருப்பதி ஏழுமலையான் கோயில், மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. தலைமை குருக்கள் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரமணா தீக்‌ஷிதலு கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி ரகம். திருப்பதி ஏழுமலையானுக்கு கிருஷ்ணதேவராயர் வழங்கிய பிளாட்டின கிரீடத்தில் இடம்பெற்றிருந்த இளஞ்சிவப்பு வைரக்கல் காணாமல்போனதாகவும், அதேபோன்ற வைரக்கல்லை ஜெனீவாவில் உள்ள Sotheby’s நிறுவனம் ஏலம்விட்டதாக பத்திரிகை ஒன்றில் படித்ததாகவும் ரமணா குற்றம் சாட்டியுள்ளார்.

"1996-ம் ஆண்டிலிருந்தே திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நகைகள் காணாமல்போகின்றன. கிருஷ்ணதேவராயர், மைசூர் மகாராஜா, பல்லவ, சோழ ராஜ பரம்பரையினர், சுவாமிக்கு வழங்கிய 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணவில்லை. எனவே, சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்'' எனக் கோரிக்கைவிடுத்திருப்பதோடு, "ஆகமவிதிகளை திருப்பதி தேவஸ்தானம் மீறுகிறது'' என்றும் குற்றம்சாட்டியுள்ளார்'' ரமணா தீக்‌ஷிதலு.

திருப்பதி

இதுகுறித்து ரமணா கூறுகையில், ``கோயிலைப் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில், பழமைவாய்ந்த சுவர்களை இடிக்கின்றனர்; குழி தோண்டுகின்றனர். இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி கவனத்துக்குக் கொண்டு சென்றால், அவரோ தனக்கு இந்த விஷயம்குறித்து எதுவும் தெரியாது என்கிறார். கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரிக்கே தெரியாமல் பழைமைவாய்ந்த சுவர்களை இடிக்க முடியுமா?'' என்றும் ரமணா கேள்வி எழுப்பியுள்ளார். 

கோயில் நிர்வாக அதிகாரி அனில் சிங்கால், தலைமை குருக்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார், ``ஆந்திரப்பிரதேச அரசு அர்ச்சகர்களுக்கான ஓய்வு வயதை 65 ஆக நிர்ணயித்து சட்டம் இயற்றியுள்ளது. வயது மூப்பின் அடிப்படையில் ரமணா தீக்‌ஷிதலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வுபெற வேண்டும் என்று அவரை நாங்கள் நிர்பந்திக்கவில்லை. பணியிலிருந்து ஓய்வுபெற்றதால் உள்நோக்கத்துடன் ஆந்திர அரசுக்கு எதிராகக் குற்றங்களை அடுக்குகிறார். திருப்பதி கோயிலுக்குச் சொந்தமான அனைத்து நகைகளும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. மக்களுக்காக கண்காட்சிக்கு வைக்கவும் நாங்கள் தாயார்''  எனப்  பதில் அளித்துள்ளார். 

திருப்பதி கோயிலின் சமையல் அறைக்குக் கீழ் உள்ள பகுதியில் விலை மதிப்பில்லாத நகைகள், வைர, வைடூரியங்கள் கொட்டிக் கிடப்பதாக ஒரு  நம்பிக்கை உண்டு. சந்திரபாபு நாயுடு அரசு, சமையல் அறைக்குக் கீழே குழிதோண்டி பார்க்க அனுமதியளித்துள்ளது. இது, திருப்பதி கோயிலின் ஆகமவிதிகளுக்கு எதிரானது என்றும், ரமணா தீக்‌ஷிதலு குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் புகாருடன் திங்கட்கிழமை டெல்லி சென்ற அவர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார். பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவையும்  ரமணா சந்தித்துப் பேசினார். 

ஆந்திரப்பிரதேசத் திட்ட வாரிய துணைத் தலைவர் குதும்ப ராவ், ``திருப்பதி கோயிலுக்கு அமித் ஷா அண்மையில் வந்தார். அவர் கொடுத்த மாஸ்டர் ப்ளான்படியே தற்போது ரமணா செயல்பட்டு அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். தென் ஆப்பிரிக்காவில் 2015-ம் ஆண்டு வெட்டி எடுக்கப்பட்ட வைரக்கல் ஜெனீவாவில் ஏலம்விடப்பட்டது. தலைமை குருக்கள் பதவியிலிருந்து ரமணா ஆடி கார் வரை வாங்கியுள்ளார். இதுவரை சம்பாதித்தது போதாதா?'' என்று ரமணாவுக்கு  எதிராக புகார் கிளப்புகிறார். 

அமித் ஷாவுடன் திருப்பதி கோயில் தலைமை அர்ச்சகர்

ரமணா காணாமல்போனதாகக் கூறும் இளஞ்சிவப்புக்கல் (Raj Pink diamond) 37.3 காரட் எடைகொண்டது. 2010-ம் ஆண்டு பிளாட்டின கிரீடத்தில் வைரம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. ஏழுமைலையான் கோயிலில் நடந்த கருடசேவையின்போது, பக்தர்கள் சாமி மீது நாணயங்களை வீசியதால், வைரக்கல் உடைந்துபோய்விட்டதாகவும் அதை பத்திரமாக எடுத்து வைத்திருப்பதாகவும் திருப்பதி தேவஸ்தானம் பதில் அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் இதேபோன்ற இளஞ்சிவப்பு வைரக்கல் ஸ்விட்சர்லாந்தின் சவுத்பை நிறுவனம் ஏலம்விட்டதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி தேவஸ்தான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்போவதாக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்