இன்று பங்குச் சந்தையில் நல்ல ஏறுமுகம்  | Share market for the day at close 24052018

வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (24/05/2018)

கடைசி தொடர்பு:17:48 (24/05/2018)

இன்று பங்குச் சந்தையில் நல்ல ஏறுமுகம் 

சமீபத்திய சரிவுகளுக்குப் பின், இந்திய பங்குச் சந்தையில் இன்று முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஓரளவு ஆர்வம் காட்டியதால், முக்கிய குறியீடுகளாக சென்செக்ஸும் நிஃப்ட்டியும் நல்ல லாபங்களுடன் முடிவடைந்தன. 

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் பெரிதாக எந்த உற்சாகமான போக்கு இல்லாது போயினும், இந்திய பங்குச் சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 318.20 புள்ளிகள். அதாவது, 0.93 சதவிகிதம் உயர்ந்து 34,663.11 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 83.50 புள்ளிகள். அதாவது, 0.8 சதவிகிதம் முன்னேறி 10,513.85-ல் முடிவுற்றது.

அமெரிக்கா - வட கொரியா நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை நடக்குமா என்ற ஐயம் மற்றும் வர்த்தக யுத்தம் பற்றிய கவலை போன்ற நெகடிவ் ட்ரிக்கர்கள் இருந்தபோதிலும், கச்சா எண்ணெய் விலையில் சிறிய இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் தொடர்ந்த பலவீனம் காரணத்தால், தகவல் தொழில்நுட்பப் பங்குகளின் விலையேற்றம், இன்று சந்தையின் முன்னேற்றத்திற்கு உதவியது.

கச்சா எண்ணெயின் விலை, பேரல் 70 டாலருக்கு மேல் உயரும்போது, மத்திய அரசு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள்மீது windfall tax செலுத்தவேண்டியிருக்கும் நிலையை ஏற்படுத்தக்கூடும் என்ற செய்தியின் காரணமாக, ஓ.ன்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனப் பங்குகள் பெரிதும் சரிந்தன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  3.3%
இன்ஃபோசிஸ்  3%
பார்தி ஏர்டெல் 4.4%
ஆக்ஸிஸ் பேங்க் 3%
சன் பார்மா 2.5%
ஹிண்டால்க்கோ 2.4%
டாடா ஸ்டீல் 2.3%
டெக் மஹிந்திரா 2.3%
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் 2%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2%

விலை சரிந்த பங்குகள் :

டாடா மோட்டார்ஸ் 6.3%
கெயில் இந்தியா 5.4%
ஓ.என்.ஜி.சி 4.3%
ஆயில் இந்தியா 7.3%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 2.5%

இன்று, மும்பை பங்குச்சந்தையில் 1283 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 1356 பங்குகள் விலை சரிந்தும், 140 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிவுற்றன.