வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (26/05/2018)

கடைசி தொடர்பு:17:26 (26/05/2018)

'உன்னை கூட்டுப் பாலியல் வன்முறை செய்வோம்!' - பெண் பத்திரிகையாளரை மிரட்டும் இணைய இம்சைகள்

'உன்னை கூட்டுப் பாலியல் வன்முறை செய்வோம்', 'உன்னைக் கொலைசெய்து தூக்கி வீசுவோம்' எனப் பகிரங்கமாக மிரட்டல்களை ரானா அயூப்புக்கு விடுக்கத் தொடங்கினர் சில இந்துத்துவ அமைப்புகள்.

'உன்னை கூட்டுப் பாலியல் வன்முறை செய்வோம்!' - பெண் பத்திரிகையாளரை மிரட்டும் இணைய இம்சைகள்

 

இந்துத்துவா

ந்த நவீன இணைய உலகத்தில், நமக்கு எந்தளவுக்குக் கருத்து சுதந்திரம் இருக்கிறது என நினைக்கிறோமோ, அந்தளவுக்கு ஒரு தனி மனிதன் கூறும் கருத்துக்கு எழும் வெறுப்பு சுதந்திரமும் எல்லைமீறி சென்றுகொண்டே இருக்கிறது. அதிலும், ஒருத்தர் அந்தக் கருத்தை கூறினாரா இல்லையா என்று ஆராயாமலே, அவர் மீது நெருப்பை உமிழப்படும். அவர் பெண்ணாக இருந்துவிட்டால், பாலியல் ரீதியில் தாக்கி வன்சொற்களைப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சமீபத்தில், அப்படி ஒரு கொடுமையைச் சந்தித்து, எதிர்த்துப் போராடிவருகிறார் பிரபல பத்திரிகையாளர், ரானா அயூப். 2002-ம் ஆண்டு  குஜராத்தில் நடந்த கலவரம் பற்றி, ' Gujarat Files: Anatomy of a Cover Up'  என்ற முக்கிய புத்தகத்தை எழுதியவர் இவர்.

'குழந்தைகளைப் பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கு மனித உரிமை என்பதே இல்லையா? முஸ்லிம்களை மிகப்பெரிய அளவில் கொல்லும் திட்டத்துடன்தான், குழந்தைகளைப் பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகளை தூக்கிலிடும் அவசரச் சட்டத்தை கொண்டுவர நினைக்கிறது இந்த இந்துத்துவா அரசு. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இனியும் பாதுகாப்பில்லை' என அந்தப்  பத்திரிகையாளரின் பெயரில் ஒரு ட்வீட் சமூக வலைதளங்களில் உலவ ஆரம்பித்தது. இது நடந்தது, ஏப்ரல் 20-ம் தேதி. அன்றிலிருந்து அவருக்குச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மிரட்டல்களும் வக்கிர கண்டனங்களும் எழுந்துவருகின்றன. 

'உன்னை கூட்டுப் பாலியல் வன்முறை செய்வோம்', 'உன்னை ஆடையின்றி இந்திய தெருக்களில் அலையவிடுவோம்', 'உன்னைக் கொலைசெய்து தூக்கி வீசுவோம்' எனப் பகிரங்கமாக மிரட்டல்களை விடுக்கத் தொடங்கினர் சில இந்துத்துவ அமைப்புகள்.

ரானா அயூப், 'இந்தக் கருத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்று விளக்கம் அளித்த பின்னரும், இப்படியான ரானாபாலியல் வன்முறை மிரட்டல்களும், அவரின் உயிரைப் பறிக்கும் திட்டங்களும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வலம்வந்தபடி இருந்தது. மேலும், அவரின்  புகைப்படத்தை ஓர் ஆபாச இணைய தள வீடியோவில் மார்பிங் செய்து வெளியிட்டு, பலரால் பகிரப்பட்டது உச்சகட்ட கொடூரம். இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவின் முதல் சில நொடிகளைக் கண்டதுமே, அந்தப் பத்திரிகையாளர் வெடித்து அழுதிருக்கிறார். 

அத்துடன் முடியவில்லை. முகநூலிலும் ட்விட்டரிலும் பலவித ஆபாச குறுஞ்செய்திகளும், சில இந்துத்துவா வெறியாளர்கள் தங்களின் நிர்வாண புகைப்படங்களையும் அனுப்பி, அந்தப் பத்திரிகையாளருக்குத் தொடர்ந்து கடுமையான பாலியல் தொல்லை அளித்துள்ளார்கள்.

மனதளவில் அவர் நிலைகுலைந்தாலும், ஒரு பத்திரிகையாளராக இந்த விஷயத்தை எதிர்த்துப் போராட நினைத்தார். ஆனால், 'பாரு ரானா, இந்தியாவில் உள்ள இந்துக்கள் பற்றியும், மோடியைப் பற்றியும் நீ பொய்யான தகவல்கள் பரப்பினால், உனக்கு இதுதான் நடக்கும். உன்னைப் பற்றி இப்படிதான் பரப்புவோம்' என்று விராஹ் சினா என்ற முகநூல் பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்ததும்,  பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. 

இந்தப் பொய்யான தகவலைப் பரப்பியது யார் என்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்தக் கசப்பான அனுபவம் குறித்து, நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில், ' In India, Journalists Face Slut-Shaming and Rape Threats' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார் ரானா.

இதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை, அவருக்குத் தக்க பாதுகாப்பு அளிக்க, இந்திய அரசை வலியுறுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்