வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (27/05/2018)

கடைசி தொடர்பு:08:13 (28/05/2018)

`மோடியும், அமித்ஷாவும் நாட்டுக்கு எதிரானவர்கள்' - காங்கிரஸ் கடும் சாடல்!

மோடியும், அமித் ஷாவும் நாட்டுக்கு எதிரானவர்கள் என்பதை மக்கள் தெரிந்துகொண்டார்கள் என காங்கிரஸ் கட்சி கடுமையாக சாட்டியுள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் முடிவடைந்து 5 ஆண்டைத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி பாஜக சார்பில் நாடு முழுவதும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும் 4 ஆண்டு ஆட்சிக்காலம் குறித்து பெருமையாகக் கூறி வருகின்றனர். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடியின் நான்கு ஆண்டு ஆட்சிக்காலம் குறித்து ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்துவிட்டது எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், ரன்தீப் சுர்ஜே வாலா ஆகியோர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது, `இந்தியாவுக்குத் துரோகம்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு பாஜக அரசிற்கு 40 கேள்விகள் கேட்கப்பட்டது. இதன்பிறகு பேசிய குலாம்நபி ஆசாத்,  ``மோடியின் நான்கு ஆண்டு ஆட்சியில் யாரும் பாதுகாப்பாக இல்லை. இவர்களது ஆட்சியில் ஒவ்வொருவருக்கும் தூக்கமில்லை இரவுகள் தான் மிச்சமாகின்றன. யார் என்ன நினைத்தாலும் அதை வெளியில் சொல்லவோ, எழுதவோ முடியாது. அந்த அளவுக்கு நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் ஆகியவை இந்த ஆட்சியில் நசுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர், பட்டியலின மக்கள், ஏழைகள் என யாரும் பாதுகாப்பாக இல்லை. மோடியும், அமித்ஷாவும் நாட்டுக்கு எதிரானவர்கள் என்பதை மக்கள் தெரிந்துகொண்டார்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க