வெளியிடப்பட்ட நேரம்: 10:11 (28/05/2018)

கடைசி தொடர்பு:11:59 (28/05/2018)

விபத்தில் பறிபோன எம்.எல்.ஏ உயிர்! - கர்நாடகா காங்கிரஸ் பலம் குறைந்தது

முன்னாள் மத்திய அமைச்சரும்  கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுமான சித்து நியாம கவுடா, சாலை விபத்தில் இன்று உயிரிழந்தார். 

 சமீபத்தில் நடந்துமுடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஜம்காந்தி தொகுதியில் போட்டியிட்டவர், சித்து நியாம கவுடா. இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீகாந்த் குல்கர்னியை இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், கோவா சென்றிருந்த சித்து நியாம கவுடா, அங்கிருந்து தனது காரில் பாகல்கோட்டுக்கு திரும்பிச்சென்று கொண்டிருந்தார். இன்று காலை 4.30 மணியளவில் அவரது கார் பாகல்கோட் மாவட்டம் துளசிகெரி கிராமத்தைக் கடந்துசெல்லும்போது, எதிர்பாராமல் விபத்தில் சிக்கியது. 

கர்நாடகா

விபத்தில் படுகாயமடைந்த சித்து நியாம கவுடாவை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அப்போது, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணத்துக்கு கர்நாடக முன்னாள் முதல்வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது, சித்து நியாம கவுடாவின் மரணத்தையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சித்து நியாம கவுடாவின் இறுதிச்சடங்கு, இன்று நடைபெற உள்ளது.