வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (29/05/2018)

கடைசி தொடர்பு:11:24 (29/05/2018)

"இந்தியாவின் தொழில் வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பிரச்னைகளும்..!” - ஓர் அலசல்

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் 80-க்குப் பிந்தைய காலகட்டங்களில் பரவலாக வெளிவரத்தொடங்கின. அது 90-களின் கடைசியில் அதிகரிக்கத் துவங்கியது. காரணம், பொருளாதார தாராளமயம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் 13 உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. காப்பர் தயாரிப்பு ஆலையான ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகள், தான் குடிகொண்டிருக்கும் பகுதி வாழ் மக்களை அச்சுறுத்திகொண்டேதானிருக்கின்றன. 

சுற்றுச்சூழல் பிரச்னைகள்

வலிமையான அமைப்பு வேண்டும்

"நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய உறுதிப்பாடுகள், குறிப்பாக சுற்றுச்சூழல் தொடர்பான  உறுதிமொழிகள் வலியுறுத்தப்பட வேண்டும். அத்தகைய உறுதிப்பாடுகள் சரியானவைதானா என்பதை தணிக்கை செய்ய ஒரு வலிமையான அமைப்பு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் தாங்கள் கைக்கொண்டுள்ள சுற்றுச்சூழல் சார்ந்த உறுதிப்பாடுகளை நிறைவேற்றாதபோது, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்!" என 90களின் தொடக்கத்தில் அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் பேசினார். அதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் 1991-ல் சந்தைப்பொருளாதாரம் இந்தியாவில் திறந்துவிடப்பட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை எனும் பெயரில் தங்குதடையின்றி இந்தியா முழுவதும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. அதன் நேரடி தாக்கம் சுற்றுச்சூழலை சீர்கெடுத்தது. அதைப் பற்றி சூழலியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். அதன் விளைவாகவே அப்போது மன்மோகன் சிங் பேசினார்.

சுற்றுச்சூழல் பிரச்னைகள்

தோல்வியில் நிற்கிறோம் நாம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் 80-க்குப் பிந்தைய காலகட்டங்களில் பரவலாக வெளிவரத்தொடங்கின. அது 90களின் கடைசியில் அதிகரிக்கத்துவங்கியது. காரணம், பொருளாதார தாராளமயம் எனும் பெயரில் முளைத்த தொழிற்சாலைகளும் அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் தாக்கமும்தான் முழுவதுமாக சுற்றுச்சூழல் விவகாரத்தில் தோல்வியில் வந்து நிற்கிறோம் நாம். இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த நாட்டில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், நிலத்தடி நீர், மண், காற்று, உயிரினங்களை மட்டுமல்ல மனிதர்களையும் தாக்கும் என்பதற்கு நேரடி சாட்சியம் ஸ்டெர்லைட். வளர்ச்சி எனும் பெயரில் முளைக்கும் ஒவ்வொரு திட்டங்களும், தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த முழுமையான அறிக்கைகளை தயாரிப்பதில்லை. அது சட்டமீறல். 'அந்த சட்டமே ஒரு கேலிக்கூத்தானது!' என 2011-ம் ஆண்டு அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது. யார் திட்டத்தை செயல்படுத்துகிறார்களோ, யார் அந்தத் தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறார்களோ அவர்களே சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கையை உருவாக்க வேண்டும் என்ற நிலை. அதனால் ஜெய்ராம் ரமேஷ் அவ்வாறு கூறினார். அது உண்மையும்கூட!

மேற்கத்திய தொழிலாக்கம் வேண்டாம்

"அமெரிக்க, பிரித்தானிய தொழிலாக்க முன்மாதிரிகளை இந்தியா கைகொள்ளுமானால், வெட்டுக்கிளி மொய்த்த விளைநிலமாக இந்தியா மாறும்!" என்று மகாத்மா காந்தி சுட்டிக்காட்டியது இங்கே நினைவுகூரத்தக்கது. மேற்கத்திய தொழிலாக்கம் இந்தியாவுக்கு வேண்டாம் என்ற கூற்று எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், இன்றைய சூழலில் அவை இந்திய சுற்றுச்சூழல் மீது தொடுத்திருக்கும் வன்முறையானது அளவுக்கு அதிகமானது, வரம்பு மீறியது என்பதும் உண்மை. இதனையே தொடர்ந்து இந்தியா பின்பற்றினால் அதன் எதிர்காலம் என்பது கேள்விக்குறியே. வறுமை ஒழிப்பு, இந்தியாவின் வளர்ச்சி இவை இரண்டுமே புதிய பொருளாதாரக் கொள்கை முன்வைத்த மிக முக்கிய மந்திரங்கள். இவை முன்வைக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆகின்றது. இவை இரண்டும் நடந்துவிட்டனவா? இதில் சுற்றுச் சூழலையும் அழித்து மேலும் வலுவிழந்து கிடக்கிறோம் நாம்.

தாக்கம் பொறுக்க முடியாமல் எதிர்க்கும் மக்கள் சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள். அப்படி என்ன வளர்ச்சியை கண்டுவிட்டது இந்தியா? மேற்கத்திய நாடுகளில், நாடு கடத்தப்பட்ட தொழிற்சாலைகளின் கூடாரமாக மாற்றப்பட்டிருக்கிறது இந்தியா. இருக்கும் வளங்களை பெருக்கி வளர்ச்சியடைவதற்கும், வளங்களை அறுத்து வளர்ச்சியடைவதற்கும் வேறுபாடு உண்டு. அப்படியென்றால் பழமை பேசவேண்டுமா என்று அர்த்தமல்ல, இந்தியாவுக்கு எனப் பாரம்பர்யமான ஒரு பொருளாதார கட்டமைப்பு உண்டு. அதைக் கையில் எடுக்கும்போது எதிர்கால சவால்கள் இன்றி இந்தியாவும் வளம் பெறும், சுற்றுச்சூழலும் காக்கப்படும் மனிதர்களும் நிம்மதியாக இருப்பார்கள். சந்தைப் பொருளாதரமும், புதிய பொருளாதாரக் கொள்கையும் கைவிடப்பட வேண்டிய ஒன்று. நல்ல காற்று வேண்டும் என்ற சூழ்நிலைக்கு இந்தியர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே காசு வேண்டும் என்ற மனநிலையை அரசு கைவிட வேண்டும்.

வளர்ச்சி என்பது அவசியம்தான். ஆனால், சுற்றுச்சூழலைக் கெடுத்து வளர்ச்சி என்பது சரியாகாது. ஏனெனில், நாமும் நம் தலைமுறைகளும் இந்த மண்ணில் இன்னும் பல லட்சம் ஆண்டுகள் வாழப்போகிறோம். 


டிரெண்டிங் @ விகடன்