வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (29/05/2018)

கடைசி தொடர்பு:17:41 (29/05/2018)

பெட்ரோல், டீசல் விலையை ஒரு நாள் இரவில் குறைக்க முடியாது..! மத்திய அமைச்சர் உறுதி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் ஒரே நாள் இரவில் தீர்வு காண முடியாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார்.

தர்மேந்திரப் பிரதான்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாத காலமாகக் கடுமையாக உயர்ந்துவருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுமீது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

பெட்ரோலியப் பொருள்களுக்கு விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்தது. இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து ஆங்கில ஊடகத்துக்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான், `இந்தப் பிரச்னையில் மேலோட்டமான தீர்வை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள், நீண்ட காலத்துக்கான தீர்வை எதிர்பார்க்கிறோம். அதற்காகப் பணியாற்றிவருகிறோம். அதற்கான தீர்வை ஒருநாள் இரவில் உருவாக்க முடியாது. நாங்கள் எங்களுடைய  பொறுப்பிலிருந்து ஓடிவிட மாட்டோம். இன்னும் 4-5 நாள்களுக்குப் பெட்ரோல், டீசல் விலை குறையாது' என்று தெரிவித்துள்ளார்.