வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (29/05/2018)

கடைசி தொடர்பு:21:40 (29/05/2018)

தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு; பணம் ஈட்டும் சொர்க்கமாக மாறிய பழைய தங்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால் பழைய தங்க நகைகளை ரொக்கத்துக்கு விற்பது அதிகரித்து வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாகச் சரிந்து வருகிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு தற்போது ரூ.67.93 ஆக உள்ளது. அதேசமயம், ரூபாயின் மதிப்பு சரிவால், இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்கம் மற்றும் நகைகளை ரொக்கத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த மே மாதத்தில் மட்டும் பழைய தங்க நகைகளின் வரத்து 10-15 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தங்கம்

அதேசமயம், இந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மே மாதம் வரையிலான காலத்தில் புதிய தங்க நகைகளின் விற்பனை 25-30 சதவிகிதம் வரையில் சரிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கத்திற்கான தேவைப்பாடு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் வாங்க யாரும் விரும்பவில்லை. 

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.66 ஆக உயரும் என்றும், இதனால் சர்வதேச் சந்தையில் தங்கத்தின் விலை உயர வாய்ப்பில்லை என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்து, அதை வாங்கி வைப்பது லாபகரமாக இருக்காது என்பதால், புதிய தங்க நகைகளை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. பழைய தங்க நகைகளை விற்று பணமாக்கவே விரும்புகின்றனர். சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தால், தங்கத்தின் மீதான முதலீடும் உயரும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

சந்தையில் 1 கிலோ தங்கத்தின் விலை ரூ.60,000 முதல் ரூ.80,000 வரையில் குறைந்துள்ளது. ஆனால், தங்கத்தை வாங்கத்தான் யாரும் ஆர்வம் காட்டவில்லை. கடை விரித்தோம்; கொள்வார் இல்லை என்ற நிலைதான் தற்போது சந்தையில் நிலவுகிறது. தற்போது, சந்தையில் விற்பனைக்குத் தொடர்ந்து பழைய தங்க நகைகள் அதிகளவில் வந்து கொண்டே இருக்கின்றன. தென் மேற்குப் பருவ மழை தொடங்கி, அது வழக்கம்போல் இருந்தால் மட்டுமே சந்தையில் சந்தைக்கான தேவைப்பாடு உயர வாய்ப்புள்ளது என்று தங்க நகை விற்பனையாளர் குறிப்பிட்டார். 

இந்தியாவில் ஆண்டு தோறும் 800-850 டன் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் 60 சதவிகித தங்கம் விற்பனை கிராமங்களில்தாம் நடைபெறுகிறது. எனவே, பருவமழை தங்கத்தின் விற்பனைக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் விளைச்சல் நன்றாக இருந்தால், தங்கள் சொத்தை அதிகரிக்க விவசாயிகள் அதிகளவில் தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பார்கள். பருவமழை பொய்த்து, விளைச்சல் பாதிக்கப்பட்டால் விவசாயிகள் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று பணத்தைத் திரட்டுவார்கள். இந்தநிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று முன்னேற்றம் கண்டு வருகிறது. ரஷ்யா, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இது ரூபாயின் மதிப்புக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக வந்த புள்ளி விவரங்களை தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் டாலர் மதி்ப்பு சிறப்பாக உள்ளது. இதன் காரணமாக, சர்வதேச் சந்தையில் தங்கத்தின் விலை உயர வாய்ப்பில்லை. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை. எனவே, ரொக்கத்துக்குப் பழைய தங்க நகைகளை விற்கும் நடவடிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் செல்லும்.