`நிலம் அதிகாரமா, வாழ்க்கையா?' - இந்தியாவின் `காலா' கணக்கு | Data story about Slums in India

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (30/05/2018)

கடைசி தொடர்பு:17:47 (30/05/2018)

`நிலம் அதிகாரமா, வாழ்க்கையா?' - இந்தியாவின் `காலா' கணக்கு

மும்பையில் வெளியாகும் டைம்ஸ் நிறுவனத்தின்  புகழ்பெற்ற 'மும்பை மிரர்' நாளிதழ் மும்பையை 'ஸ்லம்பை' என்றே அழைக்கிறது. மும்பைப் பற்றிப் பேச பிரதான விஷயம் 'ஸ்லம்'தான்!

`நிலம் அதிகாரமா, வாழ்க்கையா?' - இந்தியாவின் `காலா' கணக்கு

ஆஸ்கர் விருது அள்ளிய 'ஸ்லம்டாக் மில்லினியர்' படம் தொடங்கி ''நிலம் உனக்கு அதிகாரம்... நிலம் எங்களுக்கு வாழ்க்கை" என்று ஆவேசமாக ரஜினிகாந்த் பேசும் காலா ட்ரெய்லர் வசனம் வரை எல்லாமே ஸ்லம் ரெஃபரன்ஸ்தான்! 

இந்தியாவில் 2001 கணக்கெடுப்பின்படி குடிசைப்பகுதிகளின் மக்கள் தொகை 5.72 விழுக்காடு. 2011-ம் ஆண்டு குடிசைப்பகுதிகளின் மக்கள் தொகை 5.42 விழுக்காடு. இந்தியாவில் இந்தக் குடிசைப்பகுதிகளின் நிலை என்ன... அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதுதான் பேசப்படாத பிரச்னையாகத் தொடர்கிறது.

மும்பை என்றதும் நம் நினைவுக்கு வருவது சச்சின், ஷாருக், அம்பானி, வான்கடே, நாயகன், பாட்ஷா, சமீபத்தில் காலா! இதைத் தாண்டி மும்பை பற்றி நாம் அதிகம் பேசியதில்லை என்றே சொல்லலாம். மும்பையில் வெளியாகும் டைம்ஸ் நிறுவனத்தின்  புகழ்பெற்ற 'மும்பை மிரர்' நாளிதழ் மும்பையை 'ஸ்லம்பை' என்றே அழைக்கிறது. மும்பைப் பற்றிப் பேச பிரதான விஷயம் 'ஸ்லம்'தான்! மும்பையிலுள்ள ஓர் உயரமான மாடியில் நின்று பார்த்தால், கீழே நிறைந்து தெரியும் தகரத்தால் ஆன மேல் கூரைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. பாராளுமன்ற அறிக்கையின்படி இந்தியாவில் அதிகக் குடிசைப் பகுதிகளைக் கொண்ட மாநிலம் மும்பையைத் தலைநகராகக் கொண்ட மஹாராஷ்டிராதான்! சுமார் 9,864 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட மும்பையில் 2,470 குடிசைப் பகுதிகள் உள்ளதாக ஜியாகரபிக்கல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (GIS) நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. அந்தக் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களில் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகம். 1700-களில், ஆங்கிலேயர்களால் மும்பையில் தொடங்கப்பட்ட பல்வேறு ஆலைகளில் வேலை பார்க்க இந்தியா முழுவதுமிருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர். அதில் அதிகம் பேர் தமிழர்கள் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து அதிக மக்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை மும்பையின் சில பகுதிகளில் தமிழர்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.

காலா குடிசைப் பகுதி

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் மும்பை. உலகளவில், உள்நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்க்கு அதிக சம்பளம் தரும் நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது  மும்பை! இந்தத் தகவலை வெளியிட்டது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு வங்கியான HSBC. ஆனால், உள்நாட்டு மக்களுக்கு சரியான வசதிகளை செய்துதரத் தவறியுள்ளது மும்பை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்... ஆசிய கண்டத்திலுள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் மும்பையிலுள்ள தாராவிக்கு இரண்டாமிடம். உலகளவில் மூன்றாமிடம். 1995-ல் குடிசைப் பகுதிகளை சீரமைக்க மஹாராஷ்டிரா அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் கடந்த ஆண்டு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தாராவியைப் பின்னுக்குத் தள்ளி குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கையில் முன்வந்து நிற்கிறது மும்பையின் கிழக்கு அந்தேரிப் பகுதி! அந்தேரி கிழக்கில் மொத்தம் 281 குடிசைப் பகுதிகள் உள்ளன. அதில் சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதேபோல தாராவியில் மொத்தம் 79 குடிசைப்பகுதிகள் உள்ளன. அதில் சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். குடிசைப் பகுதிகளில் உள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை 60-65 லட்சம் என்கிறது SRA.

 

மும்பை மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தகரக் குடிசையில்தான் வசிக்கிறார்கள். 1997-ல் வெளிவந்த 'நாயகன்', 2009-ல் வெளியான 'ஸ்லம்டாக் மில்லியினர்', சமீபத்தில் வந்த காலா டீசர், ட்ரெய்லர் என பல திரைப்படங்களிலும் மும்பையின் குடிசைகளே பிராதனப்படுத்தப்படுகிறது. 

2011-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், பெரும் நகரங்களின் மக்கள்தொகையில் குடிசைவாசிகளின் விழுக்காடு எவ்வளவு என்பது வெளியிடப்பட்டது. மும்பை-41.3 %, கொல்கத்தா 29.6 % இவற்றுக்கு அடுத்து, அதிகம் குடிசைவாசிகள் வசிப்பது சென்னையில்தான்! தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், 28 % மக்கள் குடிசையில்தான் வசிக்கிறார்கள் என்கிறது 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. மேலும், குடிசைப் பகுதிகளை 'மனிதர்கள் சுகாதாரமாக வாழ தகுதியற்ற இடம்' என்றும் கூறியுள்ளது இந்தக் கணக்கெடுப்பு. தமிழகத்தில் 'குடிசை மாற்று வாரியம்' 2014-ல் நடத்திய கணக்கெடுப்பின்படி மொத்தம் 2,173 குடிசைப்பகுதிகள் சென்னையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 1956-ல் வெறும் 306 குடிசைப் பகுதிகளே இருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சென்னையைக் காட்டிலும் மும்பையில்தான் குடிசைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 41.3 விழுக்காடாக இருந்தது தற்போது சுமார் 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு சரியான தண்ணீர் வசதி, கழிப்பறை வசதிகள் கிடைப்பதில்லை. இவ்வளவு ஏன்... சுவாசிப்பதற்கேற்ற நல்ல காற்றுகூட இருப்பதில்லை. 2015-ம் ஆண்டு 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாப்புலேஷன் சைன்ஸ்' (IIPS) மும்பையிலுள்ள குடிசைப் பகுதிகளில் நடத்திய சர்வேயில், 89.6 விழுக்காட்டினர் சுவாசப் பிரச்னைகளால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் 41.6 விழுக்காட்டினர் செரிமானப் பிரச்னைகளால் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது IIPS. இது சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கான பிரச்னை மட்டுமல்ல. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி  இந்தியாவிலுள்ள 4041 சிறுநகரங்களில், 2,163 சிறுநகரங்கள்  குடிசைகளாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் குடிசைகளை அகற்ற வாரியங்கள் அமைக்கப்பட்டிருந்தும், குடிசைகளின் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை.

'இந்தப் பகுதி மக்கள் ஏன் இப்படி இருக்காங்க...' என்றக் கேள்வி எல்லோருக்குமே இருக்கும். இப்போது எல்லாப் பகுதிகளுமே தன்னை மாற்றிக் கொண்டு நகரமயமாதலுக்குத் தயாராகி வருகிறது. இந்த நகரமயமாதலில் சிக்கி அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கடற்கரையோரப் பகுதிகள் அல்லது ஒதுக்குப்புறமான பகுதிகள், நகரம் ஒதுக்கித் தள்ளியப் பகுதிகளில் குடியேறுகிறார்கள். அதிக மக்கள் தொகையை ஒரு சிறிய பகுதி தாங்க ஆரம்பித்து, அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து 'ஸ்லம்' எனும் குடிசைப்பகுதி உருவாகிறது. அத்தியாவசிய உள்கட்டமைப்புகள், மருத்துவ வசதிகள் இல்லாமல் தவிக்கும் இவர்களை அரசாங்கமும் கண்டுகொள்ளாமல் விடுவது வருத்தமான விஷயம். இங்கே நோய்களும், மரணங்களும் அதிகம். அதைவிடவும் எந்தப் பிரச்னை எழுந்தாலும் அதை முடிவுக்குக் கொண்டுவர காவல்துறை கையில் எடுக்கும் அடக்குவாத நடவடிக்கைகளுக்கும் இந்தப் பகுதிகள்தான் பலிகடா. இதற்கு மெரினா புரட்சியில் தாக்கப்பட்ட நடுக்குப்பம், ரூதர் புரம், மாட்டாங்குப்பம் போன்ற இடங்களே சாட்சியாக நிற்கின்றன! 

'இந்தியாவை க்ளீன் இந்தியா'வாக மாற்றுவேன்' என்று உறுதியெடுக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவில், நூற்றுக்கு ஆறு பேர் வாழத் தகுதியற்ற குடிசைப்பகுதிகளில்தான் வாழ்கிறார்கள் என்பதும், அவர்கள் எந்த மாதிரியான அடக்குவாதத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதும் மோடிக்குத் தெரியுமா? இந்தப் பிரச்னைகளைக் காலா பேசினால், ஒருவேளை அரசுக்கு கேட்கலாம். இந்தியாவின் குடிசைப்பகுதிகளை சினிமாக்கள் தன் கதைக்கு களமாக மட்டும் காட்டுகின்றன. தங்கள் வாழ்க்கைக்குத் தளமாக யாரும் காட்டவில்லை என்பதுதான் இங்குள்ள மக்களின் மனநிலை! இவர்களும் ஒரே விஷயத்தைத்தான் முன்னிறுத்துகிறார்கள். அது... 'நிலம் உங்களுக்கு அதிகாரம்.. எங்களுக்கு வாழ்க்கை...!'

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்