ஒடிசாவை திரும்பிப் பார்க்கவைக்கும் டீக்கடைக்காரர்!

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரைச் சேர்ந்தவர், டி.பிரகாஷ் ராவ். இவர், கடந்த இரண்டு வாரங்களாக வட மாநில ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வலம்வருகிறார். அப்படி என்ன செய்தார் இவர்... 

பிரகாஷ் ராவ் ஒடிசா

கட்டாக் நகரில் உள்ள புக்ஸி பஜாரில், சொந்தமாக தேநீர்க் கடை ஒன்றை டி.பிரகாஷ் ராவ் நடத்திவருகிறார். கடந்த 17 ஆண்டுகளாக டீ கடையின் மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை, குடிசைப் பகுதி குழந்தைகளின் கல்விக்காகச் செலவழித்துவருகிறார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக படிப்பை என்னால் தொடரமுடியவில்லை. வறுமையால் எனது படிப்புக் கனவு கரைந்தது. ஆனால், படிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்துவந்தது.  இதையடுத்து, குடிசைப் பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களில், படிக்கக் கஷ்டப்படும் சிறுவர் சிறுமியருக்கு அடிப்படைக் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும் என முடிவுசெய்தேன். குடிசைப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்காக, `ஆஷா அஷ்வாசான்' எனும் ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்தேன்' என்றார். 

இந்தப் பள்ளியின்மூலம், மூன்றாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை கற்றுக்கொடுத்துவருகிறார். 61 வயதாகும் பிரகாஷ் ராவ், கடந்த 1976-ம் ஆண்டிலிருந்து ரத்ததானம் செய்துவருகிறார். இவர் நடத்திவரும் பள்ளியில், 40-க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் படித்துவருகின்றனர். தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இயந்திரமாய்ச் சூழன்றுகொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், டி.பிரகாஷ் ராவ் சற்று வேறுபட்டிருக்கிறார். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் டி.பிரகாஷ் ராவின் கல்விச் சேவையைப் பாராட்டி, சமீபத்தில் ஒலிபரப்பான 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!