நேற்று ஆதிரா... இன்று கெவின்... கேரளாவில் தொடரும் ஆணவப் படுகொலைகள்! | Kevin murdered: honour killing in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (31/05/2018)

கடைசி தொடர்பு:11:03 (31/05/2018)

நேற்று ஆதிரா... இன்று கெவின்... கேரளாவில் தொடரும் ஆணவப் படுகொலைகள்!

கேரளாவில் அரங்கேறி வரும் ஆணவக் கொலைகள் பினராயி விஜயன் அரசுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன.

நேற்று ஆதிரா... இன்று கெவின்... கேரளாவில் தொடரும் ஆணவப் படுகொலைகள்!

ஆணவக்கொலைகள் அதிகரிக்கும் மாநிலங்களில் கேரளாவும் இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்யவிருந்த ஆதிரா என்ற பெண்ணை, பெற்ற தந்தையே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவத்தின் வடு ஆறாத நிலையில் நிகழ்ந்த மற்றொரு ஆணவக்கொலையில் கேரளாவே அதிர்ச்சியில் இருக்கிறது. 

கேரளாவில் நடந்த ஆணவக் கொலை

கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கெவின் ஜோசப். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் உயர்சாதி கிறிஸ்தவப் பெண்ணான நீனு சாக்கோவைக் காதலித்து மணந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நண்பர்கள் உதவியுடன் திருமணம் நடந்தது. கெவினுடன் மகிழ்ச்சிகரமாக வாழ்க்கையைத் தொடங்கினார் நீனு. நீனுவின் தந்தை ஜான் சாக்கோ, சகோதரர் சானு சாக்கோவுக்கு இந்தத் திருமணம் பிடிக்கவில்லை. தங்கள் பெண்ணை அழைத்துச்சென்ற கெவின் ஜோசப்பைப் பழிவாங்க முடிவெடுத்தனர். கெவினைக் கடத்திய சானு சாக்கோ, அவரை தென்மலையில் வைத்துக் கொலை செய்தார். கெவினைக் கொல்வதற்கு முன் அவரைக் கடுமையாக சித்ரவதை செய்ததோடு முகத்தையும் சிதைத்துள்ளனர். கெவின் கொலைக்கு போலீஸாரின் அலட்சியப் போக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. 

முதலில் நீனுவின் தந்தை ஜான் சாக்கோ, `தன் மகளைக் காணவில்லை' என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். போலீஸ் நிலையத்துக்குக் கெவின் மற்றும் நீனுவை வரவழைத்த சப் இன்ஸ்பெக்டர் சிபு, நீனுவின் தந்தை ஜான் சாக்கோவை உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். போலீஸ் நிலையத்தில் புதுமணத் தம்பதி திருமணம் முடித்ததற்கான ஆவணங்களைக் காட்டியுள்ளனர். அதையெல்லாம் சட்டை செய்யாத சிபு, ஜான் சாக்கோவிடம் `உங்கள் மகளை அடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்குக் கொண்டு போங்கள்' என்று கூறியிருக்கிறார். நீனு `வாழ்ந்தால் கெவினுடன்தான் வாழ்வேன்' என்று உறுதியாகக் கூறிவிட சப்-இன்ஸ்பெக்டரின் உத்தரவு எடுபடவில்லை. இதனால், சப் இன்ஸ்பெக்டர் கெவின்- நீனுமீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில்தான் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நண்பர் அனீஷ் உடன் இருந்தபோதுதான் 13 பேர் கொண்ட கும்பலால் கெவின் காரில் கடத்தப்பட்டிருக்கிறார். கோட்டயம் காந்திநகர் போலீஸ் நிலையத்துக்கு ஓடிய நீனு புகார் அளித்திருக்கிறார். போலீஸ் நிலையத்தில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் சிபு, நீனுவின் புகாரைக் கண்டுகொள்ளவே இல்லை.. நீனு புகார் கொடுத்த போது, `நான் சி.எம். டியூட்டியில் பிசி. இப்போது இதையெல்லாம் பார்க்க முடியாது' என்று சிபு அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். சப் - இன்ஸ்பெக்டர் காட்டிய அலட்சியத்தின் விளைவு... கெவின் உயிர்ப்பலி. 

கேரளாவில் போலீஸ் துறை முதல்வர் பினராயி விஜயன் வசம்தான் உள்ளது. நீனு புகார் கொடுத்த போது, சி.எம். டியூட்டியில் இருப்பதாகக் கூறி சப் இன்ஸ்பெக்டர் அலட்சியப்படுத்தியதும் அங்கே விவாதப் பொருளாகி உள்ளது. பினராயி விஜயனோ, ``முதல்வருக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்கு தனி அதிகாரிகள் உள்ளனர். இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம்'' என்று மறுக்கிறார். எதிர்கட்சிகளோ பினராயி விஜயன் பதவி விலக வேண்டுமென்று கோரி போராட்டத்தில் குதித்துள்ளன. தற்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கோட்டயம் எஸ்.பி முகமது ரஃபீக்கும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார்.

கெவினைக் கடத்திய கும்பலில் இந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பை சேர்ந்தவர்களும் ஈடுபட்டது இன்னொரு அதிர்ச்சியான விஷயம். . கைது செய்யப்பட்டவர்களில் ரியாஸ், நியாஸ், இஷான் ஆகியோர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். இதில், ரியாஸ் மார்க்ஸிஸ்ட் கட்சியில் இருப்பதாகவும் அதனால்தான் கெவின் கடத்தப்பட்டதும் நடவடிக்கை எடுக்க போலீஸ் தயங்கியதாகவும் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சிக் கோட்டயத்தில் பந்த் அறிவித்துள்ளது.

இந்த ஆணவக்கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீனுவின் தந்தை ஜான் சக்கோ, சகோதரர் சானு சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளனர். கெவின் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து நீனு இன்னும் மீளவில்லை. அழுதுகொண்டே இருப்பதாக கெவினின் பெற்றோர்கள் கூறுகின்றனர். `கெவின் கொல்லப்பட்டாலும் இனிமேல் நான் கெவின் வீட்டில்தான் வாழ்வேன் எந்தச் சூழலிலும் பெற்றோர் முகத்தில் முழிக்கமாட்டேன்' என்று நீனு சபதமிட்டுள்ளார். 

கெவின் கொலை... நடந்தது என்ன? 

ஞாயிறு அதிகாலை 2 மணி : கோட்டயத்தில் மன்னம் பகுதியிலிருந்து கெவின் கடத்தப்படுகிறார். 

அதிகாலை 3 மணி : காந்திநகர் காவல்நிலையத்துக்கு வாலிபர் கடத்தப்பட்டதாக போனில் தகவல் கூறுகின்றனர். போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

காலை 6 மணி : போலீஸ் நிலையத்துக்குக் கெவின் தந்தை சென்று புகார் கொடுக்கிறார். புகாரை போலீஸார் பெற்றுக்கொள்ளவில்லை.

காலை 8 மணி : சங்கராந்தி என்ற இடத்தில் அனீஷ் விடுவிக்கப்படுகிறார். 

காலை 10 மணி : நீனு அழுதபடி போலீஸ் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்கிறார். கோட்டயத்தில் முதல்வர் இருப்பதால் அவர் சென்ற பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும் என்கிற பதில் வருகிறது.  போலீஸ் நிலையத்தில் வைத்து நீனு மீடியாக்களுக்குப் பேட்டி கொடுக்கிறார். 

மாலை 3 மணி: கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் பினராயி விஜயன் பங்கேற்ற நிகழ்ச்சிக்குக் காந்திபுரம் சப்இன்ஸ்பெக்டர் சிபு மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மாலை 6 மணி : கெவின் கடத்தப்பட்டது தொடர்பாக 15 மணி நேரம் கழித்து விசாரணை தொடங்கப்படுகிறது. தென்மலைக்குப் புறப்பட்டுச் செல்கிறார் எஸ்.ஐ. சிபு. 

திங்கள் காலை 8.30 மணி : தென்மலையில் சாலியாறு பகுதியில் கெவின் உடல் கிடைத்தது. 

கோட்டயத்திலிருந்து தென்மலை 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இடைப்பட்டட தொலைவுக்குள் 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன. காந்திநகர் போலீஸ் மற்ற போலீஸ் நிலையங்களுக்குத் தகவல் அளித்திருந்தால்கூட கெவின் கடத்தப்பட்ட கார் பிடிபட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

ஏற்கெனவே கேரளத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில்,  பெருகிவரும் ஆணவக் கொலைகளும் பினராயி விஜயன் அரசுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன. முற்போக்கு முதல்வராக இந்தியா முழுவதும் அறியப்படும் பினராஜி விஜயன் இந்த விஷயத்தில் சாட்டையைச் சுழற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்