ஐஏஎஸ் ஆக 3 வருடம் விடா முயற்சி... கேரளாவில் சப்-கலெக்டரான முதல் பார்வையற்ற பெண்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், முதல் பார்வையற்ற பெண்  ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, பிரஞ்ஜால் லெகன்சிங் பாட்டீல் பொறுப்பேற்றுக் கொண்டார். 

பிரஞ்ஜால் லெகன்சிங் பாட்டீல் கேரளா

மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ்நகரைச் சேர்ந்தவர், பிரஞ்ஜால் லெகன்சிங் பாட்டீல். இவர், சிறுவயதிலேயே கண்பார்வையை இழந்தார். இருப்பினும், பெற்றோர் கொடுத்த ஊக்கத்தினால் தொடுதிரை உதவியுடன் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பிறகு, முப்பை சேவியர் கல்லூரியில் இளநிலை அரசியல் அறிவியல் பட்டப்படிப்பும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை கலை அறிவியல் படிப்பையும் முடித்தார். 

அதன்பிறகு, தனது சிறுவயதுக் கனவை நிறைவேற்ற விரும்பிய அவர், யூ.பி.எஸ்.சி தேர்வுக்குத் தன்னை தயார்படுத்திக்கொண்டார். கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக ஐஏஎஸ் தேர்வை எழுதினார்.  அதில், 773-வது இடத்தில் தேர்ச்சிபெற்றார். இதனால், பிரஞ்ஜால் லெகன்சிங்கால் ஆட்சியராக முடியவில்லை. இந்த நிலையில், ரயில்வே துறையில் தேர்வாகி கணக்குப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும், ஐஏஎஸ் கனவு பிரஞ்ஜால் லெகன்சிங்கை விடவில்லை. இதனால், தொடர்ந்து யூ.பி.எஸ்.சி தேர்வுக்காகக் கடுமையாக உழைத்தார். இரவு பகல் பாராமல் ஐஏஎஸ் தேர்வுக்காகத் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக்கொண்டார். 2017-ம் ஆண்டு, மீண்டும் ஐஏஎஸ் தேர்வை எழுதினார். இத்தேர்வில், 124-வது இடத்தைப் பிடித்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார். 

இதன்பின், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷனில், ஆட்சியருக்கான ஆரம்பப் பயிற்சியை மேற்கொண்டார். பயிற்சி நிறைவுபெற்றதையடுத்து, கேரள  மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சப்-கலெக்டராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியும் இருந்தால், உடல் குறைபாடுகள் ஒன்றும்  தடையாக இருக்காது என்பதை நிரூபித்துக்காட்டிய பிரஞ்ஜால் லெகன்சிங் பாட்டீலுக்கு, வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!